×
Saravana Stores

ரங்கம், உறையூர், திருவெறும்பூரில் ₹1 கோடியில் மேலும் 3 இரவுநேர விடுதி

திருச்சி, மே14: திருச்சியில் ஏற்கனவே உள்ளது போல, மேலும் மூன்று இடங்களில் இரவு நேர தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருச்சி மாநகரில் பாரதியார் சாலை, கோட்டை கீழரண் சாலை மற்றும் மதுரை சாலையில் அரசின் இரவு தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றும் 50 பேர் வரை தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. உணவு விடுதியுடன் கூடிய இந்த தங்கும் விடுதிகள் சமூக நல அமைப்புகளின் உதவியுடன் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மனநலம் குன்றியர்கள், நோயாளிகள் தங்குவதற்கு அனுமதியில்லை. இரவு நேரத்தில் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் வயோதிகர்கள், ஆதரவற்றோர் ஆகியோர் மட்டும் இவற்றில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் இவற்றில் தங்குவற்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ₹1 கோடி திட்ட மதிப்பீட்டில், இதே போன்ற மேலும் மூன்று தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த இரவு தங்கும் விடுதிகள் ரங்கம், திருவெறும்பூர் மற்றும் உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்படலாம் என தெரிகிறது.

புதிய தங்கும் விடுதிகள் சமையலறை வசதியுடன், சுகாதார வளாகம், தியான மண்டபம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன. மேலும் இந்த தங்கும் விடுதிகளில் சிலர் விதிகளை மீறி நீண்ட காலமாக தங்கி இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து இவற்றில் தங்குவதற்கான பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் இதற்கான பணிகள் துவங்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post ரங்கம், உறையூர், திருவெறும்பூரில் ₹1 கோடியில் மேலும் 3 இரவுநேர விடுதி appeared first on Dinakaran.

Tags : Varayur ,Thiruverumpur ,Trichy ,Bharatiyar Road ,Fort Geezaran Road ,Madurai Road ,Rangam ,Dinakaran ,
× RELATED திருவெறும்பூரில் ரேஷன் கடை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்