×

வில்லிபுத்தூர் பகுதிகளில் வெண்டைகளை தாக்கும் நரம்பு தேமல் நோய்: கட்டுப்படுத்த வேளாண் துறையினர் ஆலோசனை

வில்லிபுத்தூர், மே 14: நோய் தாக்குதலில் இருந்து வெண்டை பயிர்களை பாதுகாப்பது குறித்து வில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய நோயியல் பேராசிரியை விமலா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெண்டைபயிரை தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது மஞ்சள் நரம்புத் தேமல் நோயாகும். இந்நோய் வெண்டை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்நோய் ஒருவித நச்சுயிரி நோயாகும். ஆரம்பத்தில் இலை ஓரங்களிலிருந்து நரம்பு வெளுத்துக் காணப்படும்.

நாளடைவில் இலைப் பாகத்திலுள்ள நரம்புகள் கிளை நரம்புகள் யாவும் வெளுத்துத் தோன்றும். புதிதாக தோன்றும் இலைகளிலும் கிளை நரம்புகள் வெளுத்துக் காணப்பட்டு இடைப்பாகம் மட்டும் பசுமையாக இருப்பதால் வலை பின்னப்பட்டிருப்பதை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். நாளடைவில் இலைப்பாகம் முழுவதுமே வெளுத்துத் தோன்றும். இலையின் அடிப்பாகத்திலுள்ள நரம்புகள் பெரியதாயிருக்கும்.வெண்டைக் காய்கள் ஒழுங்கற்ற வடிவத்தைப் பெறுவதுடன் குட்டையாகி வெளுத்துக் காணப்படும் வெள்ளை ஈக்கள் இந்நோயை பரப்புகின்றன. இதே நச்சுயிரி களைகளையும் தாக்குகின்றன.

எனவே களைகளிலிருந்து இந்நச்சுயிரி வெண்டை செடிகளுக்கும் பரவும் வாய்ப்புண்டு. இந்நோய் தோன்றும் களைச் செடிகளை அழித்து விடுதல், பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்க களைந்தெறிதல் அவசியம். அசாடிராக்டின் 0.03, டபுள்யு எஸ்.பி 5 கிராம் / 10 லிட்டர் தண்ணீர், தயாமிதாக்ஸம் 25 டபுள்யு.ஜி 2.0 கிராம் / 10 லிட்டர் தண்ணீர் (அல்லது) இமிடாகுளோபிரிட் 5 மில்லி / 10 லிட்டர் தண்ணீர் வீதம் விதைத்த 25, 35, 45வது நாட்களில் தெளித்தால் நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

மருந்து கரைசல் பயிரில் நன்கு படிவதற்காக, சாண்டோவிட், இன்ட்ரான் ஸ்டிக்கால் என்று பல்வேறு வணிகப் பெயர்களில் கிடைக்கும் திரவ சோப்புகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு கால் மில்லி வீதம் சேர்த்துக் கலந்து தெளிக்கவும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வில்லிபுத்தூர் பகுதிகளில் வெண்டைகளை தாக்கும் நரம்பு தேமல் நோய்: கட்டுப்படுத்த வேளாண் துறையினர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Villiputhur ,Williputhur Cotton Research Center ,
× RELATED தென்காசி மக்களவை தொகுதியில் 24 சுற்று...