சென்னை: மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது என்றும், அவற்றை பாதுகாக்க உணவு தானிய பாதுகாப்பு கிடங்குகள் கட்ட வேண்டும் என்றும் முதல்வருக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் செஞ்சியிலுள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனைவதன் காரணமாக குறைந்த விலைதான் கிடைக்கிறது என்றும், தார்ப்பாய் கூட வழங்கப்படவில்லை என்றும் மேல்மருவத்தூர், திண்டிவனம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சுவடு மறைவதற்குள், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த கருநீலம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழை காரணமாக சேதமடைந்ததாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நெல் உள்பட உணவு தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கத் தேவையான கிடங்குகளை போர்க்கால அடிப்படையில் கட்டிட முதல்வர் உத்தரவிட அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
The post மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு தானிய பாதுகாப்பு கிடங்குகள் கட்ட வேண்டும்: முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.