×

அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்த வழக்கில் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் செயலாளருக்கு வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: உரிய சான்றிதழ்கள் இல்லாமல் அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதைத் தடுக்கக் கோரிய வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால் செயலாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல் மாடுகளை அண்டை மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மிருக வதை தடைச் சட்ட விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஜி.பி. தரப்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தனி நபர்கள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஜி.பி. பிறப்பித்த சுற்றறிக்கையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

சந்தேகத்துக்கு இடமான வகையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும், அதன் சார்பில் எவரும் ஆஜராகாததை ஏற்க முடியாது. வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூன் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அன்றைய தினம் விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

The post அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்த வழக்கில் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் செயலாளருக்கு வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : ANIMAL WELFARE BOARD ,CHENNAI ,Chennai High Court ,Animal Welfare Board of India ,Dinakaran ,
× RELATED உரிமை மீறல் நோட்டீஸ்: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்