சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் சிப்காட்டுக்கு சொந்தமான நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு மாற்றித் தருவதாக ₹5 கோடி மோசடியில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஏஜென்டாக செயல்பட்ட டிராவல்ஸ் உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் யசோதரன் (78). கொங்கு வேளாளர் கல்வி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
இவர், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரிடம் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
நான் 25 ஆண்டுகளாக கொங்கு வேளாளர் கல்வி நிறுவனத்தின் தலைவராக உள்ளேன். எங்களது டிரஸ்ட்டில் 122 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். எங்களுக்குச் சொந்தமாக பள்ளிகள் உள்ளன. எங்கள் பள்ளியை வாடகை கட்டிடத்தில் நடத்த வருகிறோம். இதனால் சொந்தமாக இடம் வாங்கி கட்ட முடிவு செய்தோம். அதற்காக பெருந்துறை-கோவை ரோட்டில் கருக்கங்காட்டூரில் 11.36 ஏக்கர் நிலத்தை சரிபார்த்து 76 நில உடமையாளர்களிடம் இருந்து 2015ம் ஆண்டு வாங்கினோம். 2016ல் பட்டா மாறுதலும் பெற்றோம்.
பின்னர் கட்டிடம் கட்ட டிடிசிபியிடம் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, சிப்காட் பெயரில் பட்டா மாறுதலாகியிருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தோம். பின்னர் இந்தப் பிரச்னைக்கு சட்டப்படியும், அரசு வழிகாட்டுதல்படியும் செயல்படுவது என முடிவு எடுத்தோம். இதற்காக அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்தோம். மேலும் அப்போதைய தாசில்தாரிடம் கேட்டபோது சிப்காட் பெயரில் உள்ள பட்டாவை மாற்ற முடியாது என்று கூறிவிட்டார். இதனால் எங்கள் கல்வி நிறுவனத்தின் பெயரில் பட்டா வழங்கிய துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது கண்டிப்பாக திரும்ப பெற்று விடலாம் என்று கூறினார். அதன்படி எங்களை அழைத்துக் கொண்டு நம்பியூர் சுப்பிரமணி என்பவரை அறிமுகம் செய்தார். அவரோ, உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று சொல்வதாக தெரிவித்தார்.
அவர், எழிலகத்தில் பணியாற்றும் அசோக்குமாரை அறிமுகம் செய்தார். பின்னர் அசோக்குமார், சுப்பிரமணி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து டிட்கோவில் பொது மேலாளராக உள்ள இளங்கோவனை சந்தித்தோம். அவர் ஆவணங்களைப் பார்த்தார். எல்லாம் முறையாக உள்ளது. அதிகாரிகளை சந்தித்து உங்கள் பெயருக்கு பட்டா மாற்ற ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
பின்னர் தனது அறைக்கு ஒருவரை வரவழைத்தார். அவர் பெயர் ஜெயப்பிரகாஷ்(எ)ஜெபி. ப்ளை டிராவல்ஸ் என்ற பெயரில் சென்னை, கோவையில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு பல உயர் அதிகாரிகளைத் தெரியும். பல ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொள்வார். இவர் சொன்னால் அதிகாரிகளும், அமைச்சர்களும் கேட்பார்கள் என்றார். எங்கள் முன்பே இது தொடர்பாக பல அதிகாரிகளிடம் போனில் பேசினார். பின்னர் அவரிடம் ஆவணங்களை கொடுக்கும்படி இளங்கோவன் சொன்னதால், நாங்கள் ஜெயப்பிரகாசிடம் ஆவணங்களை கொடுத்தோம்.
பின்னர் பட்டா மாறுதல் செய்து தருவதற்காக ₹6 கோடி வேண்டும் என்றார். நாங்கள், அதிமுக அமைச்சர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார். நாங்களும் சம்மதித்தோம். எங்களை ஒரு பிஎம்டபிள்யூ காரில் தலைமைச் செயலகம் அழைத்துச் செல்வார்கள். அதிகாரிகளைப் பார்ப்பார். அதைத் தொடர்ந்து அமைச்சர், அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தவணைகளில் ₹6 கோடி வாங்கினார். ஆனால் சொன்னபடி வாங்கித் தரவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் மூலம் எப்படியும் வாங்கித் தருவதாக சொன்னார். ஆனால் சொன்னபடி தரவில்லை. இதனால் ஒரு கோடியை மட்டும் திருப்பிக் கொடுத்தார். மீதம் உள்ள ₹5 கோடியை தரவில்லை.
இப்போது பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டல் விடுகிறார். ஆனால் எங்களுக்குத் தெரிந்தவரை எந்த அதிகாரிகளுக்கும் பணத்தை கொடுக்காமல் ஜெயப்பிரகாஷ் மற்றும் இளங்கோவன், அசோக்குமார், ரவிச்சந்திரன், சுப்பிரமணி ஆகியோர் ஒன்று சேர்ந்து பணத்தை பிரித்துக் கொண்டு எங்களையும், எங்கள் நிறுவனத்தையும் ஏமாற்றி வருகின்றனர். இந்தப் பணம் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான பணம்.
இவ்வாறு அந்தப் புகாரில் கூறியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, துணை கமிஷனர் என்.எஸ்.நிஷா ஆகியோரது மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல்பாண்டி, உதவி கமிஷனர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர் கலாராணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி டிராவல்ஸ் உரிமையாளர் ஜெயப்பிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயப்பிரகாஷ், பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பழக்கமானவர். தனது டிராவல்சில் இருந்து கார்களை அவர்களுக்கு இலவசமாக அனுப்பியுள்ளார். வெளிநாடுகளுக்கும் அவர்களுக்கு டிக்கெட் போட்டுக் கொடுப்பார். இந்தப் பழக்கத்தை வைத்து சிறிய, சிறிய காரியங்களை சாதித்து வந்துள்ளார். தற்போது அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று மொத்தமாக ₹5 கோடிக்கு மோசடியில் ஈடுபட்டு சிக்கியுள்ளார். தலைமைச் செயலகத்தையே அடிக்கடி சுற்றி வருவாராம். எப்போதும் யாரையாவது அழைத்துச் சென்று வருவாராம். இதனால் அவர் மீது மேலும் பல மோசடி புகார்கள் வரலாம் என்று மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
The post அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடு; சிப்காட் நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு மாற்றி தருவதாக கூறி ₹5 கோடி மோசடி: அதிகாரிகளுக்கு ஏஜென்டாக செயல்பட்டதாக டிராவல்ஸ் உரிமையாளர் கைது appeared first on Dinakaran.