×

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எச்.டி.ரேவண்ணா நிபந்தனை ஜாமீனில் விடுதலை: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: வீட்டில் வேலை செய்த பெண்ணை கடத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளது.

இதனிடையில் இதே புகாரில் வீட்டில் வேலை செய்த பெண்ணை கடத்திய புகாரில் முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு படை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதை தொடர்ந்து, 7 நாட்கள் நீதிமன்ற காவலில் ஒப்படைத்துள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ரேவண்ணா மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி சந்தோஷ் கஜனனபட் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞர் அசோக் நாயர் வாதிடும்போது, நீதிமன்றத்தின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியிருப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மக்கள் பிரதிநிதியாகவும் பிரபலமான அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். பாலியல் புகாரில் அவரது மகனும் வெளிநாட்டிற்கு தப்பியோடி உள்ளார். அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சமயத்தில் குற்றவாளிகளை ஜாமினில் விடுதலை செய்தால் சாட்சிகள் கலைக்க வாய்ப்புள்ளது என்றார். இரு தரப்பு வாதம் கேட்டபின் நீதிபதி வழங்கிய தீர்ப்பில், குற்றவாளியை (எச்.டி.ரேவண்ணா) நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.

The post பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் எச்.டி.ரேவண்ணா நிபந்தனை ஜாமீனில் விடுதலை: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : HD Revanna ,Bengaluru People's Representative Court ,Bengaluru ,Former minister ,Hassan Lok Sabha ,Brajwal Revanna ,Dinakaran ,
× RELATED பாலியல் வழக்கில் ரேவண்ணாவுக்கு ஜாமீன்