×
Saravana Stores

ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் பயங்கர மோதல்: கல் வீசி தாக்குதலால் பரபரப்பு; வாகனங்களை தீ வைத்து எரித்தனர்

திருமலை: ஆந்திர மாநில தேர்தலில் நேற்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல் வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எஸ்பி மீதும் தாக்குதல் நடந்தது. ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவையுடன் மக்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது. வெயில் கொளுத்துவதால் வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிக்க தொடங்கினர். இந்நிலையில் அனந்தபுரம் மாவட்டம் தாடிப்பத்திரி என்ற இடத்தில் உள்ள வாக்குச்சாவடியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் சரமாரி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையறிந்த மாவட்ட எஸ்.பி. அமித்பர்தார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். ஆனாலும் இரு கட்சியினர் மாறி, மாறி சரமாரியாக கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது எஸ்பி அமித்பர்தார் மீதும் சிலர் கல் வீசினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டது. மேலும் அந்த சாலைகள் முழுவதும் கற்களால் நிரம்பி இருந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தாடிபத்ரிக்கு கூடுதல் படைகளை அனுப்பியது. மேலும் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். இதற்கிடையில் அன்னமய்யா மாவட்டம் ரயில்வேகோடூரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாலுவாய் பள்ளி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒருவர் திடீரென கீழே தூக்கி போட்டு உடைத்தார். இதையடுத்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்போது வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

The post ஆந்திர மாநில தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் பயங்கர மோதல்: கல் வீசி தாக்குதலால் பரபரப்பு; வாகனங்களை தீ வைத்து எரித்தனர் appeared first on Dinakaran.

Tags : YSR ,Andhra state election ,Congress ,Telugu Desam Party ,Tirumala ,YSR Congress ,Telugu Desam parties ,SP ,Andhra… ,Dinakaran ,
× RELATED ஒய்எஸ்ஆர் முன்னாள் எம்பியின் 300...