×
Saravana Stores

நாகை எம்பி செல்வராஜ் மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: நாகை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம். செல்வராசு இன்று அதிகாலை காலமான செய்தியை கேட்டு ஆழ்ந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தனது இளமை பருவத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட செல்வராஜ், நாடாளுமன்ற தேர்தலில் 4 முறை வெற்றி பெற்று, மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: எம்.செல்வராஜ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இயற்கை அடைந்தார் என்ற செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளில் தன் பொதுவாழ்க்கையைத் தொடங்கிய செல்வராஜ் சிறப்பாகப் பணியாற்றிவர். காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் காக்கவும், தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரை இழந்துவிட்ட துயரில் நான் வருத்தம் அடைகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: செல்வராஜ் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் தனது இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர். கட்சியின் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு அர்ப்பணிப்புடன் கூடிய பணியினை செய்தவர். அவரது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: செல்வராசு இளம் வயதிலேயே பொதுவுடமை சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். தனது கடின உழைப்பாலும், இயக்கப்பணி மற்றும் மக்கள் பணியாலும், படிப்படியாக உயர்ந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது மறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நாகை மாவட்ட மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

விசிக தலைவர் திருமாவளவன்: எம். செல்வராஜ் மறைவு பெருந்துயரம் அளிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்கு உரியவை. அவரது மறைவு இடதுசாரி அரசியலுக்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா: மறைந்த செல்வராஜ் 4 முறை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் தலைவராக விளங்கியவர். சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பல்வேறு மக்கள் போராட்டங்களில் முன் நின்று நடத்திக் காட்டியவர். அர்ப்பணிப்போடு சேவை செய்வதில் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்.

The post நாகை எம்பி செல்வராஜ் மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Selvaraj ,CHENNAI ,Nagai parliamentary ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthakai ,Nagapattinam ,Constituency ,M. Deeply ,Selvarasu ,
× RELATED அக்கரைப்பள்ளியில் கடற்கரை பூங்கா அமைக்க வேண்டும்