×
Saravana Stores

8வது நாளாக கடலில் இறங்க தடை; கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வெறிச்சோடியது

கன்னியாகுமரி: தென்னிந்திய பெருங்கடலில் கடந்த 4, 5ம் தேதிகளில் கடுமையான சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் பீச்சுக்கு சுற்றுலா வந்த இடத்தில், திருச்சி தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் முடித்து, பயிற்சி டாக்டர்களாக இருந்த 5 பேர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் துயரமான சுவடு இன்னும் மறையவில்லை. இதனால் லெமூர் பீச் மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியிலும் கடந்த 6ம் தேதி முதல் கடலில் இறங்கி விளையாடவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்கும் வகையில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் பகுதி உள்பட மக்கள் கடலில் இறங்க வாய்ப்புள்ள பகுதிகளில் கயிறுகள் கட்டி எச்சரித்து உள்ளனர். இந்நிலையில் இன்று 8வது நாளாக கடலில் இறங்கி குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதியில் உலா வந்த சுற்றுலா பயணிகளிடம் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், நிலைமையை கூறி எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட படகு போக்குவரத்து வழக்கம் போல் நடந்தது. நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கினர். காலையில் தூரத்தில் நின்றபடியே சூரிய உதயத்தின் அழகை ரசித்ததோடு, படகு சவாரி செய்வதிலும் ஆர்வம் காட்டினர்.

இதனால் படகு சவாரியும் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க முடியாவிட்டாலும் தூரத்தில் நின்றபடியே கடலழகை ரசித்தனர். அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பகவதி அம்மன் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தனர். வெளியூர் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இதனால் பல தங்கும் விடுதிகளில் அறைகள் நிரம்பி விட்டன. அனைத்து தங்கும் விடுதிகளிலும் விறுவிறுவென அறைகள் புக்கிங் செய்யப்பட்டு வருவதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் வெயில் வறுத்தெடுத்து வருவதால் கன்னியாகுமரியில் இன்று கூட்டமின்றி திரிவேணி சங்கம கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

The post 8வது நாளாக கடலில் இறங்க தடை; கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Triveni Sangam ,South Indian Ocean ,Lemur Beach ,Rajakamangalam ,Trichy Private Medical College ,Dinakaran ,
× RELATED குமரி தக்கலை அருகே டபுள் கேம் ஆடியதாக...