நாகர்கோவில்: கோடை வெளியில் சுட்டெரிக்கும் நிலையில் முக்கடல் அணை நீர் மட்டம் 0.9 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாகர்கோவில் மாநகராட்சிக்கு குடி தண்ணீர் வழங்கும் ஆதாரமாக முக்கடல் அணை இருந்து வருகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் மறுகால் பாயும், முக்கடல் அணை கோடை நெருங்கும் போது, மைனஸ் மட்டத்திற்கு சென்று விடும். தற்போது, நாகர்கோவில் மாநகராட்சி மக்கள் தொகை பெருக்கம் விரிவாக்கம் காரணமாக குடிநீரின் தேவையும் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இதனால், முக்கடல் அணையில் இருந்து அதிகம் தண்ணீர் எடுப்பதால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால், 20 நாட்களுக்கு ஒரு முறை கூட குடி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட ஆண்டுகள் உண்டு. கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தநிலையில், மாற்று திட்டமாக கொண்டு வரப்பட்ட புத்தன் அணை திட்டத்தில் கிருஷ்ணன் கோயில் குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு புத்தன் அணையில் இருந்து குடி தண்ணீர் கொண்டு வரும் திட்ட பணிகள் முடிவடைந்து விட்டது. தற்போது வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சோதனை ஓட்டமாக புத்தன் அணை திட்டத்தில் சில வார்டுகளுக்கு குடிநீர் வினியோகமும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் முக்கடல் அணையில் மறுகால் பாய்ந்தது. எனினும், கோடையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மேயர் மகேஷ், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி, புத்தன் அணை திட்டம் செயல்பாட்டிற்கு வராவிட்டாலும், அங்கிருந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு தேவையான குடிநீரை பெற முயற்சிகள் மேற்கொண்டார்.
அதன்படி, தற்போது மாநகராட்சி குடிநீர் விநியோகத்திற்காக புத்தன்அணை திட்டத்தில் இருந்து 26 எம்.எல்.டி தண்ணீர் பெறப்படுகிறது. முக்கடல் அணையில் இருந்து 8 எம்.எல்.டி குடிநீர் மட்டுமே பெறப்படுகிறது. இதனால், முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டுகள் போல் இல்லாமல் இந்தாண்டு ஏப்ரல் மாத இறுதியில் மைனஸ் மட்டத்திற்கு செல்ல வில்லை. எனினும் கடும் கோடை வெயில் காரணமாகவும், அணையின் நீர் மட்டம் தற்போது 0.9 அடியாக சரிந்து உள்ளது. மைனஸ் மட்டத்தில் 20 அடி வரை தண்ணீர் எடுக்கலாம். இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியிடம் ேகட்டபோது, நாகர்கோவில் மாநகராட்சிக்கு புத்தன் அணை திட்டத்தில் 26 எம்.எல்.டி தண்ணீர் பெறப்படுவதால், முக்கடல் அணையில் நீர் மட்டம் குறைந்தாலும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.
The post கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது appeared first on Dinakaran.