×
Saravana Stores

ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில், தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் ஆலோசனை. நெல்லை சரக டிஐஜி, காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதுவரை கிடைக்கப்பெற்ற ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை. ஜெயக்குமாரின் எலும்புகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது.

நெல்லை காங்கிரஸ் தலைவர் உடல் எரிக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 9வது நாளாக மர்மம் நீடிக்கிறது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங், கடந்த 2ம் தேதி இரவு மாயமான நிலையில் 4ம் தேதி காலை திசையன்விளை அடுத்த கரைச்சுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் என்ற 2 கடிதங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

10 தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 9 நாட்களை கடந்தும் இவ்வழக்கில் மர்மம் நீடித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்வது முதல் அனைத்து தடயங்களையும் சேகரித்து வைத்துள்ளனர். ஜெயக்குமார் சடலமாக கிடந்த தோட்டத்தை சல்லடை போட்டு அலசி தடயங்களை சேகரித்தனர். தடயவியல் நிபுணர்கள் சில தினங்களுக்கு முன்பு தோட்டத்து கிணற்றில் கத்தி கண்டெடுத்தனர். இந்த கத்தியும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அதுபோல், ஜெயக்குமார் மாயமான 2ம் தேதி திசையன்விளை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய டார்ச் லைட் கருகிய நிலையில் கிடைத்தது. விசாரணையில் டார்ச் லைட் அவர் வாங்கியதுதான் என தனிப்படை போலீசார் உறுதி செய்தனர். போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில், ஜெயக்குமார் 2ம் தேதி இரவு வீட்டில் இருந்து கடைசியாக காரில் தோப்புவிளைக்குச் சென்றுள்ளார்.

கரைச்சுத்துப்புதூரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள ஊருக்கு உறுமன்குளம், பெட்டைக்குளம், குட்டம் என பல கிராமங்கள் வழியாக 43 கிமீ சுற்றிச் சென்றுள்ளார். அந்த பயணத்தின் போது ஜெயக்குமார் யாருடன் சென்றார்? என்பதற்கான விவரங்கள் தெரியவில்லை. அந்த பயணத்தின் போது மன்னார்புரம் பெட்ரோல் பங்க்கில் காருக்கு எரிபொருள் நிரப்பியுள்ளார். அவர் அங்கு வந்து சென்றது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் திசையன்விளை, வள்ளியூர், நாங்குநேரி, பணகுடி, பழவூர், உவரி, ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும் காவல் நிலையங்களிலும் மாயமானவர்கள் குறித்த பட்டியலை தனிப்படையினர் சேகரித்து வருகின்றனர். இதில் மாயமானவர்களில் யாரேனும் ஜெயக்குமாரின் உடல் அமைப்பை கொண்டவர்களா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Jayakumar ,Nella ,Nella Eastern District Congress ,President ,Southern IG ,Kannan ,Rice Cargo ,Dinakaran ,
× RELATED திருக்குறுங்குடியில் யானை...