×

பெங்களூருவில் 18ம் தேதி அக்னி பரீட்சை: பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய சிஎஸ்கே-ஆர்சிபி கடும் போட்டி

பெங்களூரு: ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 62வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 52, வில் ஜாக்ஸ் 41, கேமரூன் கிரீன் 32, கோஹ்லி 27 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில் கேப்டன் அக்சர் பட்டேல் 57, ஷாய் ஹோப் 29 ரன் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். 19.1 ஓவரில் 140 ரன்னுக்கு டெல்லி ஆல்அவுட் ஆனது. இதனால் 47 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றிபெற்றது. பவுலிங்கில் அந்த அணியின் யாஷ் தயாள் 3 விக்கெட் எடுத்தார். கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 13வது போட்டியில் 6வது வெற்றி பெற்ற ஆர்சிபி பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது.

7வது தோல்வியை சந்தித்த டெல்லி கிட்டத்தக்க வாய்ப்பை இழந்துவிட்டது. வெற்றிக்கு பின் ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் கூறியதாவது: \\”புத்திசாலித்தனமாக, நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். இது நம்பிக்கைளை அதிகரித்துள்ளது. சீசனின் முதல் பாதியில், நாங்கள் அதற்காக போராடினோம். முதல் 5 அல்லது 6 ஆட்டங்களில், எங்களால் விக்கெட் எடுக்க முடியவில்லை. தற்போது அந்த பிரச்னை தீர்ந்துள்ளது. ஒரு கேப்டனாக பந்துவீச்சில் நிறைய வகைகள் இருப்பதாக உணர்கிறேன். 6, 7 பவுலர்கள் உள்ளதால் அவர்களை நிலைக்கு ஏற்ப பயன்படுத்த முடிகிறது. பெர்குசன் சிறப்பாக செயல்பட்டார்’’ என்றார். நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் சுற்றில் 62 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் 8 போட்டியே மீதமுள்ளது. இதில் கேகேஆர் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் 15ம் தேதி பஞ்சாப், 19ம் தேதி கேகேஆருடன் மோத உள்ளது. இதில் ஒன்றில் வென்றால் போதும். சன்ரைசர்ஸ் 7 வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ள நிலையில், 16ம்தேதி குஜராத், 19ம் தேதி பஞ்சாப்புடன் மோதும் நிலையில் ஒரு வெற்றி போதும். மற்றொரு இடத்திற்கு சிஎஸ்கே-பெங்களூரு இடையே தான் கடும் போட்டி உள்ளது.

வரும் 18ம் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த இரு அணிகளும் தங்கள் கடைசி போட்டியில் மோத உள்ளது. தற்போது சிஎஸ்கே 14 புள்ளி ரன்ரேட் 0.528, ஆர்சிபி 12 புள்ளி ரன்ரேட் 0.387 ஆகவும் உள்ளது. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வென்றால் சிக்கலின்றி பிளே ஆப் வாய்ப்பை பெறும். நெருக்கமான தோல்வியை சந்தித்தாலும் தகுதிபெற முடியும். மறுபுறம் ஆர்சிபி நல்ல ரன்ரேட்டில் வென்றால் வாய்ப்பு கிடைக்கும். அதாவது முதலில் பேட் செய்தால் 18 ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். சேசிங் செய்தால் 11 பந்துகளை மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டவேண்டும். இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா என்ற நிலையில் உள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. டெல்லி, லக்னோ, குஜராத் அணிகள் மீதமுள்ள போட்டிகளில் வென்றாலும் ரன்ரேட் மைனசில் இருப்பதால் வாய்ப்பு மிகமிக குறைவுதான்.

The post பெங்களூருவில் 18ம் தேதி அக்னி பரீட்சை: பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய சிஎஸ்கே-ஆர்சிபி கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,CSK ,RCB ,Royal Challengers Bangalore ,Delhi Capitals ,IPL ,Bengaluru Chinnaswamy Stadium ,Delhi ,CSK-RCB ,Dinakaran ,
× RELATED பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு...