×

புவி வெப்பமயமாதலை தடுக்க காற்றில் கார்பன் அளவை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

*கோத்தகிரியில் பயிலரங்கில் வலியுறுத்தல்

ஊட்டி : புவி வெப்பமயமாதலை தடுக்க காற்றில் கார்பன் குறைப்பு ஏற்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் நுகர்வோர் அமைப்புகளும் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என கோத்தகிரியில் நடந்த நுகர்வோர் அமைப்புகளுக்காக மாநில பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு, கிளைமேட் ரிசைலியனஸ் அண்ட் சஸ்டெய்னபிலிட்டி இனிஷியேட்டிவ்ஸ் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் தமிழகத்தில் செயல்படும் நுகர்வோர் இயக்கங்களின் செயல்பாட்டாளர்களுக்கான காலநிலை மாற்றத்தில் நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டமும், நுகர்வோர் அமைப்புகளின் பங்கும் என்கிற தலைப்புகளில் மாநில அளவிலான பயிலரங்கம் கோத்தகிரியில் நடந்தது. நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் இணை செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பெருந்தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மேலும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் அவினாஷ் திரவியம் பேசியதாவது: உலக அளவில் இன்று கால நிலை மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கால நிலை மாற்றம் என்பது 100 ஆண்டுகளில், 10 ஆண்டுகளில் மற்றும் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றம் என பிரிக்கப்பட்டு கண்காணிக்கபடுகிறது.

ஒரே கண்டமாக இருந்த உலகம், இயற்கை மாற்றங்கள் மூலம் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 7 கண்டங்களாக மாறிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் உலகம் கால நிலை மாற்றத்தினால் மிக பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக தற்போது சராசரியாக 15 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டிய புவியின் வெப்ப நிலை 16.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக அதிகரித்து உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதே நிலையில் வெப்பம் அதிகரித்தால் 2050ல் 2 டிகிரியும் 21ம் நூற்றாண்டில் 3 புள்ளிகள் அதிகரித்து 18 டிகிரி செல்சியஸ் ஆக மாறும் அபாயம் உள்ளது. எனவே உயிர்களை காத்துக் கொள்ளவும் உலகம் வெப்பத்தினால் அழிவை நோக்கி நகர்வதை தடுக்கவும் மிக அவசரமான வெப்ப குறைப்பு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்.

பூமி தன்னை தானே சரி செய்து கொள்ளும் மீள் திறனை இழப்பதற்கு முன் மனித செயல்பாட்டால் புவி வளி மண்டலத்தில் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் கார்பன் அளவை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பாட்டு வருகின்றன. 2050ம் ஆண்டுக்குள் வெப்பத்தின் அளவினை 2 டிகிரி செல்சியஸ் உயராதவாறும், புவி வெப்பத்தினை 1.5 டிகிரிக்கு மிகாமலும் வைத்துக்கொள்ளுதல் ஓவ்வொரு மனிதனின் கடமையாகும். எனவே புவி வெப்பமடைதலை தடுக்க நுகர்வோர் அமைப்புகள் பெரிய அளவில் கார்பன் அளவை குறைக்கும் வெட்டி வேர், மூங்கில் உள்ளிட்ட தாவரங்கள் வளர்ப்பை மக்களிடம் ஊக்குவிக்க வேண்டும்.

மக்களிடம் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ஊராட்சி அளவில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டங்கள் மூலம் சுமார் 260 வகையான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதில் 150 பணிகள் சூழல் மேம்பாடு, மண் வளம் சார்ந்த பணிகள் ஆகும். இதனை சரியாக செயல்படுத்தினால் சூழல் பாதுகாப்பு உறுதிபடுத்த முடியும். இவ்வாறு பேசினார்.இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் மாநில தலைவர் திருநாவுக்கரசு பேசும்போது, ‘‘புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நுகர்வோருக்கு புதிய சாதகமான சட்டப்பிரிவுகளை கொண்டுள்ளது. போலி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களையும் எதிர்தரப்பாக சேர்த்து வழக்கு பதிய முடியும்.

அதுபோல இணைய வழி வர்த்தகம் சார்ந்த வழக்குகள் பதிவு செய்யலாம். அதில் டெலிவரி செய்யும் நிறுவனம், விளம்பர நிறுவனம், பொருள் உற்பத்தி நிறுவனங்கள் என எதிர் தரப்பாக சேர்த்து நுகர்வோர் பொருள் பெற்ற மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யலாம். நுகர்வோர் வழக்குகளில் இணையத்தில் பதிவு செய்யும் வசதி உள்ளது. போலி விளம்பரம் மற்றும் கலப்பட பொருட்களை வாங்கி பாதிக்கப்படும் நுகர்வோர்களின் நலனை காக்க நுகர்வோர் அமைப்புகள் முன் வர வேண்டும்’’ என்றார். பயிற்சி இயக்குனர் சரவணன் மற்றும் பயிலரங்கில் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். முடிவில் வேதியியலாளர் அகிலன் நன்றி கூறினார்.

The post புவி வெப்பமயமாதலை தடுக்க காற்றில் கார்பன் அளவை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Tamil Nadu ,
× RELATED கோத்தகிரி பகுதியில் கொட்டி தீர்த்தது கோடை மழை