×

வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள்

* புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

* கண்டுகொள்ளாத மாசுக்கட்டுப்பாடு வாரியம்

வேலூர் : வேலூர் அடுத்த மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலையோரம் தொடர்ந்து எரிக்கப்படும் குப்பைகளில் இருந்து கிளம்பும் புகை வாகன ஓட்டிகளை தள்ளாட செய்வது மட்டுமின்றி விபத்துக்களையும் ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழக தலைநகரம் சென்னை, கர்நாடக தலைநகரம் பெங்களூரு என இரண்டு பெரும் நகரங்களுக்கு இடையே மையப்புள்ளியாக அமைந்துள்ள வேலூர் மாநகரை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம்-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை என பிரதான இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கின்றன.

இதில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலைகளுடன் 6 வழிச்சாலையாக உள்ளது. 24 மணி நேரமும் பல்லாயிரக்கணக்கான சரக்கு லாரிகள், பயணிகள் பஸ்கள், கார்கள்,
வேன்கள், இருசக்கர வாகனங்கள் என படுபிசியாக உள்ள நெடுஞ்சாலையாகும்.இந்த சாலை,யின் சர்வீஸ் சாலை என்பது வேலூர் சேண்பாக்கம் தொடங்கி அப்துல்லாபுரம் வரை திடக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டுமிடமாகவும், அதை எரிக்கும் இடமாகவும் மட்டுமே அங்குள்ள இறைச்சி வியாபாரிகளாலும், பிற தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளாலும், ஓட்டல்களாலும், மோட்டார் வாகன பணிமனைகளாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் குப்பையை கொட்டுவதுடன், அவற்றை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் இந்த சாலையில் துர்நாற்றம், நெடியுடன் கூடிய புகை மண்டலம் என்பதும் வழக்க
மான ஒன்றாகி போயுள்ளது.இதுதொடர்பாக பலமுறை சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகும்போது மட்டும் மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகளும் வந்து சுத்தம் செய்து செல்கின்றனர். பின்னர் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்று விடுகின்றனர்.

ஏற்கனவே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் தொடங்கி மேல்மொணவூர், அப்துல்லாபுரம், பொய்கை, செதுவாலை, பள்ளிகொண்டா வரை தொடர் விபத்துகள்
ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவது என்பது விபத்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதுடன், சுற்றுச்சூழல் மாசுக்கும் காரணமாகிறது.
அதேபோல் அதை ஒட்டி வாழும் மக்களின் உடல் நலனிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரியமும், உள்ளாட்சி அமைப்புகளும் அங்கு குப்பைகள் கொட்டுவோரை, தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் அவர்களின் முறையற்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்கின்றனர் அப்பகுதி வாழ் மக்கள்.

The post வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள் appeared first on Dinakaran.

Tags : Melmonavur ,Vellore ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...