×

ஊட்டி, கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்

*ஜொலிக்கும் ஆதாம் நீரூற்று; உறவினர்களுடன் செல்பி எடுத்து குதூகலம்

கோத்தகிரி : நீலகிரியில் கோடை சீசன் துவங்கிய நிலையில் ஊட்டி பூங்காக்கள், கொடநாடு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஊட்டியில் ஆதாம் நீரூற்று மின் விளக்குகளில் ஜொலித்து, கண்களுக்கு விருந்தளித்தது. மேலும் உறவினர்களுடன் செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். நீலகிரியில் கோடை சீசன் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஊட்டியில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கவும், இதமான சூழலை அனுபவிக்கவும், தாவரவியல் உள்ளிட்ட பூங்காங்களிலும், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு காட்சி முனையிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

ஒருபுறம் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தாலும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து தமிழக -கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லை பகுதிகளில் உள்ள மலை முகடுகள், ராக்பில்லர் உள்ளிட்ட இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்கின்றனர். உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த புவியியல் அமைப்பை கொண்டுள்ளது. தற்போது கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் தினமும் படையெடுத்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை ஊட்டி, கோத்தகிரி காட்சி முனை பகுதிகளில் களை கட்டி காட்சியளித்தது.

வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் ஆதாம் நீருற்று கோடை சீசன் சீசனை முன்னிட்டு பொலிவுபடுத்தப்பட்ட ஆதாம் நீருற்று வண்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருவதால், குளு குளு காலநிலை நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகளும் கணிசமான அளவு வந்த வண்ணம் உள்ளனர். கோடை விழாவினை முன்னிட்டு பூங்காக்கள் தயாா் செய்யப்பட்டு பல்வேறு வண்ண மலா்கள் பூத்து குலுங்குகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அவற்றை பார்வையிட்டு வருகின்றனர்.

நகாில் உள்ள கடைகளில் தைலம், பிளம்ஸ், பிச்சீஸ், ஊட்டி தேயிலைத்தூள் போன்றவை வாங்கி செல்கின்றனர். நகாில் உள்ள ஆதாம் நீருற்று, சாலையோர தடுப்புகள் போன்றவைகள் வர்ணம் தீட்டி பொலிவுபடுத்தப்பட்டன. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழும் வண்ணம் ஆதாம் நீரூற்றில் தண்ணீர் பொங்கி வருவதுடன் வண்ண வண்ண விளங்குகளால் ஜொலிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

மேலும் கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு காட்சி முனை மிகச்சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. இதனை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று வருகை புரிந்தனர். தற்போது கோடை சீசன் துவங்கிய நிலையில் கொடநாடு காட்சி முனையில் வெயில் சூழ்ந்த இதமான காலநிலை நிலவுகிறது.

இந்நிலையில் இங்கு அமைந்துள்ள தமிழக – கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லை பகுதிகளில் உள்ள மலை முகடுகள், வெண் மேகங்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வன பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.

மேலும் ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் ஊட்டியில் நேற்று மதியம் கனமழை பெய்தது, பயணிகளுக்கு புதிய அனுபவமாகவும், இதமான சூழலையும் ஏற்படுத்தியது.

The post ஊட்டி, கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Koda Nadu ,Kuthugalam Kothagiri ,Nilgiris ,Ooty Parks ,Adam ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...