×

போச்சம்பள்ளி ஜி.ஹெச் அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து 20 தென்னை மரங்கள் கருகின

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், மா மரங்கள் முற்றிலும் காய்ந்து வரும் நிலையில், தென்னை மற்றும் பனை உள்ளிட்ட மரங்களும் தப்பவில்லை. கொளுத்தும் வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் புல்-பூண்டுகளை தொடர்ந்து மரங்களும் காய்ந்து சருகாகி வருகின்றன. இந்நிலையில், சாலையில் செல்வோர் புகைத்து விட்டு சிகரெட் துண்டுகளை அணைக்காமல் வீசிச் செல்வதால், வேலி செடிகள் தீப்பிடித்து எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலியில் பிடிக்கும் தீ, தோட்டங்களில் பரவி மா மரங்கள் அதிகளவில் சேதமாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.

போச்சம்பள்ளி அரசு அருத்துவமனை அருகே உள்ள விவசாய நிலம், உரிய பராமரிப்பின்றி தரிசாக கிடந்த நிலையில், செடி-கொடிகள் படர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. கடும் வறட்சியின் காரணமாக செடி-கொடிகள் காய்ந்து போய் சருகான நிலையில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து அங்குள்ள தென்னை மரங்களுக்கும் தீ பரவியது. இதில், 20 தென்னை மரங்கள் கொளுந்து விட்டு எரிந்து நாசமானது.

அப்போது, கரும்புகை மூட்டம் பரவியது. அரசு மருத்துவமனை வரை புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறால் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post போச்சம்பள்ளி ஜி.ஹெச் அருகே விவசாய நிலத்தில் தீ விபத்து 20 தென்னை மரங்கள் கருகின appeared first on Dinakaran.

Tags : Bochampalli G.H. 20 ,Bochambally ,Krishnagiri district ,Mathur ,Pochampally GH 20 ,Dinakaran ,
× RELATED முட்டை விற்பனை ஜோர்