×

மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போலீசார்


மாமல்லபுரம்: மாமல்லபுரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்துகளை குறைக்கும் வகையில் பேரிகார்டில் போலீசார் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி வருகின்றனர். மாமல்லபுரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக சாலை விபத்துக்களும், அதில் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் வாகனங்களின் அதிவேகம் காரணமாக பல விபத்துக்கள் நடந்து வருகின்றன. இச்சாலைகளில், அதிக வளைவுகளும், மேடுகளும் உள்ளன. குறிப்பாக, பல ஆபத்தான வளைவுகள் உள்ளது. இங்கு, கவனமாக வேகத்தை குறைத்து செல்லாவிட்டால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலை, விதிகளை பலரும் மதிக்காததும், அதிவேகமாக வாகனங்களில் செல்வதும் பெருமளவில் விபத்துக்கு காரணமாகின்றன.

இதில், பல இளைஞர்கள் அதிக திறன் கொண்ட பைக்குகளில் கண், மண் தெரியாமல் பறக்கின்றனர். இவர்கள், தங்களை குறித்தோ, குடும்பம் மற்றும் சாலையில் செல்லும் பிற பயணிகள் குறித்தோ எந்தவித எண்ணமும் இன்றி ‘ஸ்பீடு டிரைவிங்’ செய்து விலை மதிப்பில்லாத உயிரை பிரிய காரணமாகின்றது. அதிக விபத்து, பகுதிகள் ஆபத்தான வளைவுகள், குறுகலான இடங்களில் வேகத்தை குறைக்கும் வகையில் தடுப்புகள் மற்றும் சென்டர் மீடியன்கள் வைப்பதோடு, வாகனங்கள் செல்ல வேண்டிய அதிகபட்ச வேக எல்லை உட்பட அறிவிப்பு பலகைகளையும் வைத்திருக்க வேண்டும். ஆனால், இது குறித்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆபத்தான, வளைவு பகுதிகளில் கூட அறிவிப்பு பலகைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வாகனங்களின் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்ய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்பி சாய்பிரனீத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, மாமல்லபுரம் டிஎஸ்பி ரவி ஆபிராம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் முன்னிலையில், இசிஆர் சாலையில் மாமல்லபுரம் முதல் திருவிடந்தை வரை அதிக விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து போலீசார் பேரி கார்டுகளை அமைத்தனர். இதனால், இப்பகுதிகளை கடந்து செல்லும் போது வாகன ஓட்டிகள் வேகத்தை குறைத்து கவனமாக சென்று வருகின்றனர். மேலும், பேரி கார்டு வைத்ததன் மூலம் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை உறுதி செய்துள்ளது.

இதன் மூலம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும் எனவும், விபத்துக்களும் பெருமளவில் குறையும் எனவும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்நிலையில், இசிஆர் சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரி கார்டுகளில் விபத்துகளை குறைக்கும் வகையிலும், வளைவு பகுதி உள்ளது என்பதை வாகன ஓட்டிகள் அறிந்து மெதுவாக செல்லும் வகையில், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில், போக்குவரத்து போலீசார் திருவிடந்தை, பேரூர், பூஞ்சேரி சந்திப்பு, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் பேரி கார்டுகளில் நேற்று முன்தினம் இரவு சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இரவில் ஒளிரும் வகையில் ஸ்டிக்கர்கள் ஓட்டினர். இந்த சம்பவம், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

The post மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ECR ,Mamallapuram ,Mamallapuram Traffic Police ,ECR ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு