×
Saravana Stores

பயணிகளின் வசதிக்காக 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 40 எஸ்கலேட்டர்கள்: நிர்வாகம் ஏற்பாடு

சென்னை: சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சென்னையின் பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் மெட்ரோவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். நெரிசலின்றி வந்து செல்ல முடிவதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயன்பாட்டில் உள்ளது. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை – சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சுமார் ரூ63,246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையின் முக்கிய இடங்கள் அனைத்தையும் இணைக்கும் வகையில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 40 எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பயணிகள் வருகை அதிகமாக உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, எழும்பூர், திருமங்கலம், அண்ணா நகர், ஆலந்தூர், கோயம்பேடு, டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் மேலும் 40 எஸ்கலேட்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதற்கான பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் பணிகள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post பயணிகளின் வசதிக்காக 10 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 40 எஸ்கலேட்டர்கள்: நிர்வாகம் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும்...