×

கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை!

சென்னை: கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

கோடை வெயிலால் காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளதாகவும், வழக்கமாகச் சந்தைக்கு 700 முதல் 800 காய்கறி வண்டிகள் வந்துசெல்லும் நிலையில், 300 வண்டிகளே வந்து செல்வதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் கீரை வகைகள், பழங்கள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆந்திரா, மகராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்வேறு வகையான காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அனைத்து காய்கறிகளும் மொத்தமாகவும், சில்லரை விற்பனையிலும் கிடைப்பதால் ஏராளமான பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கோடை வெயில் காரணமாக நேற்று கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டதால் காய்கறிகள் இருமடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று 1 கிலோ பீன்ஸ் ரூ.200 முதல் ரூ.230க்கும் 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.70க்கும், 1 கிலோ அவரைக்காய் ரூ.90 முதல் ரூ.110க்கும் 1 கிலோ கேரட் ரூ.50 முதல் ரூ.70க்கும் 1 கிலோ பூண்டு ரூ.250க்கும் 1 கிலோ சேனைக்கிழங்கு ரூ.70க்கு விற்பனை ஆகிறது.

The post கோயம்பேடு சந்தையில், காய்கறிகளின் விலை 2 மடங்காக உயர்ந்ததால் மக்கள் வேதனை! appeared first on Dinakaran.

Tags : Coimbed market ,Chennai ,Asia ,
× RELATED அங்காடி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை;...