×

நெடுங்குன்றம் ஊராட்சியில் குப்பை கிடங்காக மாறிய சுடுகாடு பாதை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தாம்பரம்: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நெடுங்குன்றம் சுடுகாடு உள்ளது. இதன் அருகே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நெடுங்குன்றம் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பை, இறைச்சி கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும், இந்த குப்பை கழிவுகளை மர்ம நபர்கள் அவ்வப்போது தீ வைத்து எரிப்பதால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிப்பதுடன் சுற்றுப் பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி, அருகில் உள்ள குட்டையிலும் குப்பை மற்றும் இறச்சி கழிவுகள் கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தனியார் லாரிகளில் கொண்டுவரப்படும் கழிவுநீரையும் இங்குள்ள குட்டை மற்றும் திறந்தவெளி பகுதிகளில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் மாசடையும் நிலை உள்ளது. குறிப்பாக, இங்கு கொட்டப்படும் குப்பை கழிவுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சாப்பிடுவதால் அவை உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இந்த பகுதியில் குப்பை கழிவுகள் மற்றும் கழிவு நீரை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளிக்கும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post நெடுங்குன்றம் ஊராட்சியில் குப்பை கிடங்காக மாறிய சுடுகாடு பாதை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chudugadu Path ,Nedungunram Panchayat ,Tambaram ,Nedungunram Crematorium ,Birkankaranai Police Station ,Nedungunram ,
× RELATED நெடுங்குன்றம் ஊராட்சியில்...