டெல்லி: 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக 88 தொகுதிக்கும் 3ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திரா 25, தெலுங்கானா 17, மராட்டியம் 11, ம.பி. 8, பீகார் 5, ஒடிசாவில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.
உத்தரப் பிரதேசம் 13, மேற்குவங்கம் 8, ஜார்க்கண்ட் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 17.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசா மாநிலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 28 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறு: நீண்டவரிசையில் நின்று மக்கள் வாக்களிப்பு appeared first on Dinakaran.