சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 70வது பிறந்தநாளை கட்சியினர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று 70வது பிறந்த நாளை, கட்சியினர் முன்னிலையில் கொண்டாடினார். சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியத்தில் இருந்து கட்சியினர் 70 கிலோ கேக்கை எடுத்து வந்திருந்தனர். மேலும் பலர் 70 கிலோ எடையுள்ள பல கேக்குகளை எடுத்து வந்திருந்தனர். இதனால், வீட்டு வாசலில் 300 கிலோவுக்கு மேல் கேக்கை வரிசையாக அடுக்கி வைத்தனர்.
பின்னர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்து, அந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். கட்சியினருக்கு கேக்குகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து மாலைகள், பூங்கொத்துகள், பரிசு பொருட்களை அளித்தனர். முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர், கட்சியினருடன் வந்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செம்மலை மற்றும் சேலத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், ஜாகீர் அம்மாப்பாளையத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொலைபேசி மூலம் எடப்பாடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
எடப்பாடிக்கு ஆட்டுக்குட்டி பரிசு: பிரியாணிக்கு தள்ளுமுள்ளு
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க திரண்டனர். அவர்கள் முந்திரி மாலை, 70 வகையான சீர் வரிசையுடன் வந்திருந்தனர். அப்போது, கட்சி தொண்டர் ஒருவர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினார். அதனை மகிழ்ச்சியுடன் அவர் பெற்றுக் கொண்டார். அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில், டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டியில் பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசைகளை கொண்டு வந்து எடப்பாடிக்கு பரிசாக வழங்கினர். பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அப்போது, தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு பிரியாணி வாங்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
The post சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் 70வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி: மாஜி அமைச்சர்கள், கட்சியினர் வாழ்த்து appeared first on Dinakaran.