×

திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 1,912 செவிலியர்கள் பணிநிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க நிர்வாகிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேள் அம்மையாரின் பிறந்தநாளான மே மாதம் 12ம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. 90 சதவீதத்துக்கு மேலான கோரிக்கைகள் முழுமை பெற்றுள்ளது. 1,412 ஒப்பந்தச் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்தவர்களுக்கு ₹16,000 சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது ₹18,000 ஆக உயர்த்தப்பட்டது.

அதோடு மட்டுமல்லாது 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 9,535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர்கள் விரும்புகிற பணியிடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். செவிலியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கும் தேர்வுக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 1,912 செவிலியர்கள் பணிநிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dimuka government ,Minister ,Ma. Subramanian ,Chennai ,R. B. ,Subramanian ,World Nurses Day ,Tamil Nadu Government Nurses Association ,Executives ,Ma ,Dinakaran ,
× RELATED 9, 10-ம் வகுப்புகளை தொடர்ந்து 8ம் வகுப்பு...