×

சிஎம்டிஏ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் யூடியூபர் சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய அவதூறு கருத்து உட்பட 7 வழக்குகளில் கோவை சிறையில் உள்ள யூடியூபர் சங்கர் மீது சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.

சென்னை மதுரவாயல் எம்எம்டிஏ தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர் (எ) சவுக்கு சங்கர் (48). இவர் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனல் மற்றும் பிற யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல் அளித்தபோது, காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியிருந்தார்.

இதன் அடிப்படையில் கடந்த 4ம் தேதி சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர். கைது செய்யப்படும் போது, 400 கிராமுக்கு மேல் அவரது காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தாக தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து 7ம் தேதி கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு அவதூறு வழக்கில் திருச்சி போலீசார் கடந்த 8ம் தேதி சங்கரை கைது செய்தனர். இத்துடன் சென்னை பெருநகர காவல்துறையில் தொலைக்காட்சி பெண் செய்தியாளர் ஒருவர் அளித்த புகார் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி அளித்த புகார் ஆகியவற்றின் மீது யூடியூபர் சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஆகியோர் மீது சைபர் கிரைம் போலீசார் கடந்த 7ம் தேதி தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்களிடையே போலி ஆவணம் மூலம் பீதியை ஏற்படுத்தியது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சங்கர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கஞ்சா பதுக்கிய வழக்கில் தேனி போலீசார் சங்கரின் வீடு மற்றும் தி.நகரில் உள்ள சங்கரின் யூடியூப் சேனல் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா, லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை தேனி போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் அளித்த புகாரின் மீது சைபர் கிரைம் போலீசார் அளித்த பரிந்துரைப்படி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், யூடியூபர் சங்கர் (48) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் உள்ள யூடியூபர் சங்கருக்கு சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் அதற்கான உத்தரவை நேரில் வழங்கினர்.

யூடியூபர் சங்கர் மீது சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ள மேற்படி வழக்கு உட்பட 7 வழக்குகளில், 3 வழக்குகளில் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகளில் நீதிமன்ற விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், அவதூறு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ரெட் பிக்ஸ் சேனல் உரிமையாளரான பெலிக்ஸ்ஸை நேற்று முன்தினம் சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் கைது செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு பெலிக்ஸை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

The post சிஎம்டிஏ அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் யூடியூபர் சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Shankar ,CMDA ,Chennai Metropolitan Police ,Chennai ,Commissioner ,Sandeep Rai Rathore ,YouTuber Shankar ,Coimbatore ,Klambakkam ,YouTuber ,Dinakaran ,
× RELATED அண்ணன், தம்பி ஜோடியாக அதிதி ஷங்கர்