சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் சீமான் பணம் பெறுவது உண்மை என்று இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இயக்கத்தின் துணைத் தலைவர் ஜெய சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில் நடைபெறும் அரசியல் சூழ்நிலை குறித்தும் சீமான் ஈழத் தமிழர்களை வைத்து தவறாக அரசியல் செய்வது குறித்தும் இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இயக்கத்தின் துணைத் தலைவர் ஜெய சரவணன் சென்னை சேப்பாக்கத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
இலங்கை குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இளைஞர்களிடையே வன்மத்தை விதைத்து வருகிறார். கோபத்தை ஏற்படுத்தி போர் குணத்துடன் அரசியல் செய்து வருகிறார். அது உணர்ச்சிபூர்வமாக இல்லாமல், அறிவியல் பூர்வமான அரசியலாக இருக்க வேண்டும். போர் வேண்டாம் என்பதற்காக நான் பேசி வருகிறேன். போரை நாங்கள் நேரடியாக சந்தித்தோம். ஆதரவு கொடுப்பவர்கள் கள சூழலை புரிந்து கொள்ள வேண்டும்.
தனி ஈழம் கோரிக்கை பிரபாகரனால் முடியாமல் போனது. பிரபாகரன் இறந்து விட்டதில் அதனை அடையாளம் காட்டிய கருணாகரன் உறுதியாக இருக்கிறார். தற்போது இந்திய அரசு இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் 50 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இலங்கையில் நடக்கும் பிரச்னையை முழுமையாக இந்திய அரசு கவனிக்கவில்லை. இலங்கை இறுதி போரின்போது இந்தியா நினைத்து இருந்தால் தடுத்து இருந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
தற்போது இலங்கை அரசியல் சூழ்நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை அதிகரிக்க யார் உதவியாக இருப்பார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். கட்சத்தீவு விவகாரம் குறித்து இரண்டு அரசுகள்தான் தீர்மானிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் பேசினால் தீர்வு காண முடியாது. துவாரகா பெயரில் வெளியான வீடியோ உண்மையில்லை. சீமான் பேசி வரும் கருத்துகள் தொடர்பாக அவரை சந்தித்து வலியுறுத்துவோம். சிங்கள அமைப்பு சீமானுக்கு எதிராக உள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் சீமான் பணம் பெறுவது உண்மைதான். இவ்வாறு அவர் கூறினார்.
The post புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து பணம் பெறும் சீமான்: ஜெய சரவணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.