சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி சென்னை அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், பட்லர் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களமிறங்கிய சாம்சன் 15 ரன்களில் வெளியேற 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது.
பராக் மற்றும் ஜுரேல் ஜோடி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து சற்று மீட்டது. இறுதியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பராக் 47* ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் கேப்டன் ருதுராஜ் 42* ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.
The post ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி appeared first on Dinakaran.