×

96 எம்பி தொகுதிகள் மற்றும் 2 சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்; ஆந்திராவில் வரலாறு காணாத பாதுகாப்பு: 26,550 துணை ராணுவத்தினர் உள்பட 1 லட்சம் பேர் குவிப்பு

திருமலை: ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 நாடாளுமன்ற தொகுதிகளில் நாளை 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் மட்டும் 26,550 துணை ராணுவத்தினர் உள்பட 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல்கட்டமாக கடந்த ஏப். 19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், இரண்டாம் கட்டமாக கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. அதேபோல் மூன்றாம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று நிறைவடைந்தது. இத்தொகுதிகளில் நாளை (மே 13) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஆந்திர மாநிலத்தில் 25 நாடாளுமன்ற ெதாகுதிகள், 175 சட்டசபை ெதாகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தொகுதிகளில் 454 வேட்பாளர்களும், சட்டப்பேரவை தொகுதிகளில் 2,387 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இங்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4 கோடியே 13 லட்சத்து 33 ஆயிரத்து 702 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இவர்களில் 2 கோடியே 10 லட்சத்து 56 ஆயிரத்து 137 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 2 லட்சத்து 74 ஆயிரத்து 144 ஆண் வாக்காளர்கள், 3421 திருநங்கைகள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்டனர். அதன்படி மொத்தம் 4,44,216 பேர் எம்பிகளுக்கும், 4,44,218 பேர் எம்எல்ஏக்களுக்கும் வாக்களித்துள்ளனர்.

நாளை நடைபெறும் வாக்குப்பதிவிற்காக மாநிலம் முழுவதும் 46,165 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 555 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 179 வாக்கு மையங்கள் பெண் ஊழியர்களை கொண்டும், 63 வாக்கு மையங்கள் மாற்றுத்திறனாளிகளை கொண்டும், 50 வாக்கு மையங்கள் இளைஞர்களை கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 218 பேர் ஈடுபடுகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தில் இருந்து 4,500 போலீசாரும், கர்நாடகாவில் இருந்து 3,500 போலீசாரும், ஆந்திராவில் 45,960 போலீசாரும், துணை ராணுவப்படையினர் 295 கம்பெனிகளை சேர்ந்த 26,550 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 145 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மொத்தம் 175 தொகுதிகளில் 169 தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஆனால் மாவோயிஸ்ட் தாக்கம் அதிகம் உள்ள அரக்கு, பாலேறு, ரம்பசோடவரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் மாலை 4 மணி வரையும், பாலகொண்டா, குரப்பாம், சாலூறு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் மட்டுமே வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போலீசார் மற்றும் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.71 கோடியே 3 லட்சத்து 72 ஆயிரம் ரொக்கம் மற்றும் மது, கஞ்சா, தங்கம், வெள்ளி, சேலைகள், பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.269.28 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் நேற்றிரவு தெரிவித்தனர்.

இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் 17 எம்பி தொகுதியிலும், 144 எம்எல்ஏ தொகுதியில் போட்டியிடுகிறது. பாஜக 10 எம்எல்ஏ, 6 எம்பி தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 எம்எல்ஏ, 2 எம்பி தொகுதிளிலும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகிறது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 14 சட்டமன்ற தொகுதிகளிலும், 2 எம்பி தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மற்ற அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் கடப்பா மாவட்டம் புலிவெந்துலா தொகுதியில் 3 வது முறையாகவும், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 8வது முறையாக குப்பம் தொகுதியிலும், காங்கிரஸ் மாநில தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா கடப்பா எம்பி தொகுதியிலும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரத்திலும், அமைச்சர் ஆர்.கே.ரோஜா நகரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. முன்னதாக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதன்படி கடப்பாவில் காங்கிரஸ் எம்.பி. வேட்பாளர்
ஷர்மிளா, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

திருப்பதி ஜோதிராவ் பூலே சந்திப்பில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் ரோடு ஷோ நடந்தது. சித்தூர் மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசினார். அதேபோல் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிலக்கலூர்பேட்டை தொடங்கி பித்தாபுரத்தில் தனது இறுதி கட்டப் பிரசாரத்தை முடித்தார். இதோடு ஒடிசாவில் முதல் கட்டமாக 4 மக்களவைத் தொகுதிகளுடன் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடக்கிறது.

இவை தவிர, தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவைத் தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 11, மேற்குவங்கம், மத்திய பிரதேசத்தில் தலா 8, சட்டீஸ்கரில் 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4 தொகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் 170 பெண்கள் உள்பட 1,717 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ள ஸ்டார் வேட்பாளர்கள் பட்டியலில், ஒன்றிய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், அர்ஜுன் முண்டா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசஃப் பதான், காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆந்திர மாநில முதல்வரின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா, எம்பி பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா, நடிகர் சத்ருகன் சின்ஹா, நடிகை மாதவி லதா உள்ளிட்டோர் உள்ளனர்.

இதுவரை மூன்று கட்டங்களில் 283 ெதாகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை நடக்கும் 96 தொகுதிகளுடன் சேர்த்து 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைய உள்ளது. மீதமுள்ள ெதாகுதிகளில் வரும் 20, 25, ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அதன்பின் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post 96 எம்பி தொகுதிகள் மற்றும் 2 சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல்; ஆந்திராவில் வரலாறு காணாத பாதுகாப்பு: 26,550 துணை ராணுவத்தினர் உள்பட 1 லட்சம் பேர் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : MB ,Andhra ,Thirumalai ,Odisha ,Jammu and ,Kashmir Union Territory ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் வாக்கு...