×

சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக புகார்; நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்: போபால் ஐகோர்ட் உத்தரவு

போபால்: சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக எழுந்த புகாரால் நடிகை கரீனா கபூருக்கு போபால் ஐகோர்ட் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகை கரீனா கபூர் (43), கடந்த 2021ம் ஆண்டு கர்ப்பகால நினைவுகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்திற்கு ‘கரீனா கபூரின் கர்ப்ப பைபிள்’ என்று பெயரிட்டிருந்தார். ‘பைபிள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் அந்தோணி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.அலுவாலியா, எதிர்மனுதாரர்களான கரீனா கபூர், புத்தகத்தின் இணை ஆசிரியர் அதிதி ஷா பீம்ஜியானி, புத்தகத்தை வெளியிட்ட ஜக்கர்நாட் புக்ஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை ஜூலை 1ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. இதுகுறித்து ஜபல்பூரைச் சேர்ந்த சமூக சேவகரான கிறிஸ்டோபர் அந்தோணி கூறுகையில், ‘நடிகை வெளியிட்ட புத்தகத்தில் ‘பைபிள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கிறிஸ்தவ சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளது.

மலிவான விளம்பரம் கிடைக்கும் என்பதால், அவர் அந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் புனித நூலாக பைபிள் உள்ளது. இந்த நிலையில் தனது கர்ப்பகால நினைவுகளை பைபிளுடன் ஒப்பிடுவது தவறு. இவ்விவகாரம் தொடர்பாக முதலில் காவல்நிலையத்தில் கரீனா கபூருக்கு எதிராக வழக்கு பதிய அணுகினேன். ஆனால் அவர்கள் வழக்கு பதிவு செய்ய மறுத்ததால், அவருக்கு எதிராக கீழ் நீதிமன்றத்தில் முறையிட்டேன். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன்’ என்றார்.

The post சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிட்டதாக புகார்; நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்: போபால் ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kareena Kapoor ,Bhopal Aycourt ,Bhopal ,iCourt ,Bollywood ,Kareena ,Dinakaran ,
× RELATED ம.பி.யில் பேருந்தில் தீ : 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீக்கிரை