×

இ-பாஸ் நடவடிக்கையால் கேரள சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்தது

கூடலூர்: நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை கடந்த 7ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஊட்டிக்கு வரும் கேரளா சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்து வருகிறது. ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில் கூடலூர் வழியாக கேரளாவில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வெகுவாக குறைந்துள்ளன.இதனால் காலை மாலை நேரங்களில் கூடலூர் நகரில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலும் குறைந்துள்ளது.

குறிப்பாக மாலை நேரத்தில் ஊட்டியில் இருந்து சுற்று திரும்பும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் கூடலூர் கள்ளிக்கோட்டை சாலை சந்திப்பு சிக்னல் முதல் மேல் கூடலூரையும் தாண்டி சுமார் இரண்டு கி.மீ தொலைவிற்கு மேல் ஊர்ந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

குறிப்பாக ஊட்டிக்கு சீசன் காலங்களில் மட்டுமின்றி சாதாரண காலங்களிலும் கேரளாவில் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.கூடலூர் வழியாக ஊட்டி செல்லும் சாலையில் நடுவட்டம்,பைக்காரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகளை நம்பி தேநீர் கடைகள், உணவகங்கள், என சிறு சிறு வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் இவர்களின் வியாபாரமும் பெரிதும் குறைந்துள்ளது.

சுற்றுலாவை நம்பி தொழில் நடத்தும் விடுதிகள்,உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெரும்பாலான கேரளா சுற்றுலா பயணிகள் கேரள எல்லை சுல்தான் பத்தேரி வழியாக கர்நாடக எல்லை குண்டல்பேட் வழியாக மைசூர் பகுதிக்கு தங்களது சுற்றுலாவை மாற்றி வருகின்றனர்.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரப்பு வியாபாரிகளுக்கும் கிடைக்க வேண்டிய சுற்றுலா வருமானமும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக இ-பாஸ் நடைமுறைக்கு பல்வேறு தரப்பினரிடமும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. சீசன் காலங்களில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இ-பாஸ் நடவடிக்கையால் கேரள சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Koodalur ,Neelgiri district ,Ooty ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே...