×
Saravana Stores

நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

திருப்பூர்: திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் கிராமத்தில் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். விவசாயத்திற்காக 1948ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போதும் குளத்தைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளுக்கு பயன்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கால சூழலுக்கு ஏற்றவாறு வெளிநாட்டு பறவைகளின் வருகை நஞ்சராயன் குளத்தில் அதிகரிக்கும். தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு நஞ்சராயன் குளத்தை 17வது பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. பறவைகள் சரணாலயத்திற்கான பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் வலசை வந்த பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியிருந்து தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச்சென்றது. தற்போது, உள்நாட்டு பறவைகளின் வருகை நஞ்சராயன் குளத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கூழைக்கிடா, புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, சின்னமுக்குளிப்பான், நெடுங்கால் உள்ளான், மீன்கொத்தி, பாம்புதாரா, அருவாள் மூக்கன், மயில் உள்ளான், கருங்குறுகு, மஞ்சள்குறுகு உள்ளிட்ட பறவைகளின் வருகை தந்துள்ளது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாட்டு பறவைகளின் வருகையால் உள்நாட்டு பறவைகள் சாத்தான்குளம், வேடந்தாங்கல், கத்தாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு வலசை சென்றது. வலசை வந்த வெளிநாட்டு பறவைகள் திரும்பிச் சென்றன. தற்போது உள்நாட்டு பறவைகள் நஞ்சராயன் குளத்திற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்ததாலும் நஞ்சராயன் குளத்தில் தண்ணீர் வற்றாமல் உள்ளது.

இதன்காரணமாக, பறவைகள் வசிப்பதற்கான சூழல் நிலவுவதால் வழக்கத்தை விட உள்நாட்டு பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்ததன் காரணமாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், பறவைகளுக்கான இரை தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. நஞ்சராயன் குளத்தில் உள்ள திட்டு மேடுகள், முள் மரங்கள் இவற்றால் கூடு கட்டுவதற்கு வசதியாக உள்ளதால் பறவைகளின் விருப்ப இருப்பிடமாக நஞ்சராயன் குளம் மாறி வருகிறது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் ரவீந்திரன் கூறும் போது, ‘நஞ்சராயன் குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் மற்றும் உள்நாட்டு பறவைகள் பருவத்திற்கு ஏற்றவாறு வருகை தரும். தண்ணீர் வற்றாமல் இருப்பதால் உள்நாட்டு பறவைகளின் வருகை அதிகரித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் தொடங்கும் உள்நாட்டு பறவைகளின் வருகை ஜூலை மாதம் வரை நீடிக்கும். பறவைகள் வாழ்வதற்கு தேவையான சுற்று சூழல் நஞ்சராயன் குளத்தில் இருக்கிறது.

குறிப்பாக, உள்நாட்டில் அரிதாக காணப்படும் மயில் உள்ளான் பறவை தற்போது நஞ்சராயன் குளத்திற்கு வலசை வந்துள்ளது. கடந்த பத்து நாட்களில் கணக்கிட்ட போது கூழைக்கடா 70, மூன்று வகையான கொக்குகள் 300 , நீர்க்காகம் 250 , புள்ளி மூக்கு வாத்து 70, நாமக் கோழி 120 வரையிலும் காண முடிந்தது. இதுபோல் பாம்பு தாரா , மீன் கொத்தி , நெடுங்கால் உள்ளான், சின்ன முக்குளிப்பான் உள்ளிட்ட பறவைகளும் காண முடிந்தது. இனி வரும் மாதங்களில் உள்நாட்டு பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்றார்.

The post நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nanjarayan Pond ,Tirupur ,Tirupur Oothikuli Road Sarkar Periyapalayam ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...