விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் குழந்தை திருமணம் செய்ததாக 13 வழக்குகளும், சிறுமிகளை கர்ப்பமாக்கியதாக 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
நம் நாட்டில் 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாக கருதப்படுகிறது. இதனை மேற்கொள்வோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் பற்றிய புகார்களை 1098 அல்லது 181 ஆகிய இலவச தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவித்த உடன் சமூகநல களப்பணியாளர்கள், சைல்டுலைன் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர்கள், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேரடியாக குழந்தையின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்துவர். குழந்தை திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள், திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் குழந்தை மீட்கப்பட்டு நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்படும்.
குழந்தை திருமணம் நடந்திருந்தால் மணமகன், மணமகனின் பெற்றோர், பெண் குழந்தையின் பெற்றோர், திருமணம் நடத்துவதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். இளம் வயதில் கருவுற்ற குழந்தைகள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் காரணமான நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். 18 வயது நிறைவடையாத குழந்தையை திருமணம் செய்யும் ஆண் மற்றும் திருமணத்தை நடத்தி வைப்போருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றத்தில் கைது செய்யப்படும் நபர்களுக்கு ஜாமீன் கிடையாது.
18 வயது நிரம்பாத பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கருவுற்ற நிலையில் கண்டால் காரணமான நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் ஏப்.1 முதல் 30 வரை 13 குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 வயது நிறைவடையாமல் குழந்தை திருமணம் செய்து கொடுத்த பின், கருவுற்ற பெண் குழந்தைகள் தொடர்பாக 7 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post விருதுநகர் மாவட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் 13 குழந்தை திருமண வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.