×

திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள்

திருச்சுழி, மே 12: திருச்சுழி அருகே கீழப்பூலாங்கால் கிராமத்தில்  வீரஜக்கதேவி கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சிறிய மாடுகளுக்கு தனித்தனியாக நடந்த போட்டியில் கீழபூலாங்காலில் இருந்து துத்திநத்தம் வரை சுமார் 10 கி.மீ தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து பெரிய மாடுகள் பிரிவில் 12 ஜோடிகளும், சிறிய மாடுகள் பிரிவில் 28 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடுகள் பிரிவில் சிவபாலன் என்பவரது மாடுகள் முதலிடம் பிடித்து ரூ.40 ஆயிரம் பரிசை தட்டி சென்றது.

இரண்டாம் பரிசான ரூ.35 ஆயிரத்தை, சித்திரங்குடி ஆர்ஜிஆர் என்பவரது மாடுகளும், மூன்றாம் பரிசான ரூ.30 ஆயிரத்தை பூலாங்கால் காதர்பாட்சா என்பவரது மாடுகளும் தட்டி சென்றன. சின்ன மாடுகள் பிரிவில் முதல்பரிசான ரூ.30 ஆயிரத்தை பூலாங்கால் பகுதியைச் சேர்ந்த வட்டாளம் கனி பிரதர்ஸ் மாடுகளும், இரண்டாம் பரிசான ரூ.25 ஆயிரத்தை பூலாங்கால் அபுராக்குட்டி என்பவரது மாடுகளும் தட்டி சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமானோர் சாலையின் இருபுறமும் திரளாக கூடி நின்று கண்டு ரசித்தனர்.

The post திருச்சுழி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம்: இலக்கை நோக்கி சீறிய காளைகள் appeared first on Dinakaran.

Tags : Thiruchuzhi , Veerajakadevi temple Chitrai Pongal festival ,Geezapoolangal village ,Dinakaran ,
× RELATED திருச்சுழியில் 54 மிமீ மழை பதிவு