×

குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில், மே 12: குமரி மாவட்டத்தில் பெய்துள்ள மழையால், அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வெயில் கொடுமை வாட்டி வதைத்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்தது. பல்வேறு நகரங்களில் 100 டிகிரியை வெயில் தாண்டியது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அதன் பின்னர் 2 நாட்கள் வரை வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மலையோர பகுதிகளிலும் மழை இருந்தது. இந்த மழை காரணமாக அணைகளுக்கான நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 246 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 47.30 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 204 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 221 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் பெருஞ்சாணி அணைக்கு 91 கன அடி தண்ணீர் தான் வந்தது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் தான் திறந்து விடப்பட்டது. தற்போது மழை பெய்ததாலும், சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளதால் சானல்களில் அதிகளவில் தண்ணீர் தேவை என்பதாலும், வைகாசி விசாக திருவிழாவுக்காக கோயில் தெப்பக்குளங்களில் தண்ணீர் நிரம்ப வேண்டும் என்பதாலும் பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

சிற்றார் 1 – நீர் மட்டம் 9.28 அடியாகவும், சிற்றார் 2 – 9.38 அடியாகவும், பொய்கை 15.70 அடியாகவும், மாம்பழத்துறையாறு 14.93 அடியாகவும், முக்கடல் 1.5 அடியாகவும் இருந்தன. மழையை பொறுத்தவரை கன்னிமாரில் 3.8 மில்லி மீட்டர், ஆரல்வாய்மொழியில் 6.4, பாலமோரில் 4.2, தக்கலையில் 11.4, சிற்றார் 2 ல் , 28.4 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. களியலில் 18.2, பேச்சிப்பாறையில் 10.6, பெருஞ்சாணியில் 48.6, புத்தன் அணையில் 46.2 , சுருளகோடு 27 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையால், வெப்பம் சற்று தணிந்து உள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kumari ,Perunjani Dam ,Nagercoil ,Kumari district ,Tamil Nadu ,Agni Nakshatra ,
× RELATED குமரி கடற்கரையில் பாம்பு குவியலா?