×

பள்ளிவிளை மத்திய சேமிப்பு குடோன் ஒப்பந்தகாரருக்கு ₹1 கோடி பாக்கி

நாகர்கோவில், ேம 12: ஒப்பந்தகாரருக்கு மத்திய சேமிப்பு கிட்டங்கி நிர்வாகம் ₹1 கோடி பாக்கி வைத்துள்ளதால், பள்ளிவிளை குடோனில் இருந்து லாரிகளில் பொருட்கள் ஏற்ற மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. நுகர்பொருள்வாணிப கழகம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன்கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டின் கீழ் கோணம், ஆரல்வாய்மொழி, உடையார்விளை, காப்புகாடு ஆகிய இடங்களில் குடோன்கள் உள்ளன. தமிழக அரசு ஒதுக்கீடு ெசய்யப்படும் ரேஷன் பொருட்கள் இந்த குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன்கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யப்படும் பொருட்கள் பள்ளிவிளையில் உள்ள மத்திய சேமிப்பு கிட்டங்கியில் வைக்கப்பட்டு, பின்பு நுகர்பொருள் வாணிபகழக குடோன்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. பள்ளிவிளை குடோனில் இருந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை லாரிகள் மூலம் கொண்டு சென்று இறக்குவதற்கு என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தகாரர் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களின் தேவைக்கு ஏற்ப பள்ளிவிளை குடோனில் இருந்து அனுப்பி வைக்கின்றனர். அதற்கு உண்டான செலவுத்தொகை இந்திய உணவு கழகம் மூலம் பெறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒப்பந்தகாரருக்கு உண்டான பணத்தை மத்திய சேமிப்பு கிட்டங்கி நிர்வாகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. பல்வேறு முறை கேட்டபிறகும் பணம் கொடுக்காமல் காலம் கடத்தப்பட்டது. இதனால் ஒப்பந்ததாரர் தரப்பில் லாரிகளில் பொருட்கள் ஏற்றவில்லை. இதனால் பொருட்கள் ஏற்ற வந்த லாரிகள் பொருட்கள் ஏற்றப்படாமல், குடோனில் நிறுத்தப்பட்டு இருந்தன.

இது குறித்து ஒப்பந்ததாரர் தரப்பில் கூறியதாவது: பள்ளிவிளை குடோனில் இருந்து பொருட்கள் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு வருகிறது. அதற்கு உண்டான தொகையை மத்திய சேமிப்பு கிட்டங்கி நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த மார்ச் 15ம் தேதி முதல் பொருட்கள் ஏற்றி சென்றதற்கான தொகையை வழங்கவில்லை. இதன்படி சுமார் ₹1 கோடி தரவேண்டியுள்ளது. பணம் கொடுக்காமல் காலம் கடத்துவதால், நாங்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி மற்றும் லாரிகளுக்கு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு லாரிகளில் பொருட்களை ஏற்றவில்லை. மத்திய சேமிப்பு கிட்டங்கி அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொருட்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்றனர்.

The post பள்ளிவிளை மத்திய சேமிப்பு குடோன் ஒப்பந்தகாரருக்கு ₹1 கோடி பாக்கி appeared first on Dinakaran.

Tags : Pallivilaya Central Savings ,Contractor ,NAGARKOVILLE ,Palivali ,Consumer Goods Corporation ,Pallivilaya Central Storage Cotton Contractor ,Dinakaran ,
× RELATED திருச்சியில் 3 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு