புதுக்கோட்டை, மே 12: கோடை உழவு செய்வதனால் மண் இறுக்கம் நீக்கப்படுவது மட்டுமல்லாமல் மண்ணின் நீர் பிடிப்பு திறனும் அதிகரிக்கப்படுகிறது. பயிர்களின் மகசூல் 20 சதம் வரை அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிப்பதால் மண் வளத்தினை அதிகரிக்க, மழை நீரை சேமித்திட கோடை உழவு செய்திட ஆர்வம் காட்ட வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர், புதுக்கோட்டை அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார். பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பெய்யும் மழையானது கோடை மழை என்றழைக்கப்படுகிறது. இந்த சமயங்களில் பெய்யும் மழையினால் வெப்ப மண்டல பகுதியானது நமது நிலங்களின் மேல்மட்ட மண் அதிக வெப்பமடைகிறது.
இந்த வெப்பமானது கீழ்பகுதிக்கு செல்லும் போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். எனவே கோடை காலத்தில் பெய்யும் மழை நீரானது பூமிக்க செல்ல வழி வகுத்து நீரை நிலத்தில் சேமித்திட கோடை உழவு அவசியமாகிறது. மேலும், கோடை காலங்களில் பெய்யும் மழையினைப்பயன்படுத்தி கோடை உழவு செய்வதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. மண்ணிலுள்ள பெருங்கட்டிகள் உடைந்து மண்ணுக்குள் காற்று மற்றும் நீர் ஆகியவை எளிதாக உட்புகுந்து செல்ல வாய்ப்பிருப்பதால் பயிர்களின் வேர்கள் மண்ணுக்குள் நன்கு ஆழமாக ஊடுருவி பரவமுடியும். இதனால் மண் அரிமானம் குறைந்து மண்ணில் நீர் ஊடுருவும் திறன் அதிகரிக்கும். மண்ணில் நீர் பிடிப்புத்திறனும் அதிகரிப்பதால் பயிருக்க தேவையான ஊட்டச்சத்துகள் எளிதாக கிடைக்கும்.
கோடை உழவு செய்யும் போது உண்டாகும் அதிக காற்றோட்டத்தினால் மண்ணிலுள்ள பூச்சிகொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள் மற்றும் களைகள் முந்திய பயிர்களின் வேர்களிலிருந்து வெளிப்படும் ரசாயனங்கள் சிதைக்கப்பட்டு விடும். பயிர்களில் நோயை உண்டாக்கும் தீமை செய்யும் நுண்கிருமிகள் மற்றும் நூற் புழுக்கள் ஆகியவையும் வெளிக்கொண்டு வரப்பட்டு கோடை காலங்களில் நிலவும் அதிக வெப்பத்தினால் அழிக்கப்பட்டுவிடும். கோடை உழவு செய்வதால் மண் இறுக்கம் நீக்கப்படுவது மட்டுமல்லாமல் மண்ணின் நீர் பிடிப்புத் திறனும் அதிகரிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் இனி வரும் காலங்களில் பெய்ய இருக்கும் மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன் பெற வேண்டும். புதுக்கோட்டை, வேளாண்மை உதவி இயக்குநர் அன்பரசன் தெரித்துள்ளார்.
The post கோடை உழவு செய்தால் மண் இறுக்கம் நீக்கப்படுவதோடு பயிர் மகசூல் 20 சதவீதம் அதிகரிக்கும்: வேளாண் உதவி இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.