×
Saravana Stores

சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் பயங்கர வெடி விபத்து: அதிகாலை நேரம் என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

சிவகாசி: சிவகாசி அருகே நேற்று அதிகாலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாயின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, காத்தநாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (47). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் இயங்கி வருகிறது. நாக்பூர் லைசென்ஸ் கொண்ட இந்த ஆலையில் 42 அறைகள் உள்ளன. 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் பணி முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்றனர். நேற்று அதிகாலை 5.45 மணியளவில் மருந்து வைத்திருக்கும் கெமிக்கல் அறையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் கெமிக்கல் அறை, சல்பர் அறை வெடித்து சிதறி தரைமட்டமானது. கரி தூசி அறை, ஜென்ரல் ஸ்டோர் ரூம் இடிந்து விழுந்தது. இந்த பயங்கர வெடி சத்தம் அருகில் உள்ள கிராமங்களில் கேட்டவுடன் அப்பகுதி மக்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று தீ பரவாமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். வழக்கமாக பட்டாசு ஆலையில் காலை 8 மணிக்கு வேலை தொடங்கும். இந்த விபத்து அதிகாலை நேரம் நடந்ததால் வேலைக்கு தொழிலாளர்கள் வராமல் இருந்தது உயிரிழப்பை தடுத்துள்ளது. பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜாராம் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

* உரிமையாளர்களுடன் ஒன்றிய அரசு அதிகாரிகள் முக்கிய ஆலோசனை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் உட்பட பல்வேறு இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆலைகளில் கடந்த சில தினங்களாக தொடர் வெடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 9ம் தேதி நடந்த வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். நேற்று நடந்த வெடிவிபத்தில் 4 அறைகள் தரைமட்டமாயின. நடப்பாண்டில் இதுவரை 28 பேர் வரை பலியாகியுள்ளனர். இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில், சிவகாசியில் டான்பாமா வளாகத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் (பெசோ) நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை தலைமை அலுவலர் கந்தசாமி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், விதிகளை மீறி அளவுக்கு அதிகமான ரசாயன மூலப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருட்களை மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். மூலப்பொருட்கள் ஒன்றுடன் ஒன்று உராயும் வகையில் இருப்பு வைத்திருக்கக்கூடாது. அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகள் வழங்கினர்.

* 10 தொழிலாளர்கள் பலி ஆலை உரிமம் ரத்து
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமத்துடன் இயங்கி வந்தது. ஆலை உரிமையாளர் சரவணன், மற்றொரு நபருக்கு ஆலையை குத்தகைக்கு விட்டதும், குத்தகைக்கு எடுத்த நபர் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தி செய்ததால் வெடி விபத்து ஏற்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட ஆலைக்கு நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) வழங்கிய உரிமத்தை அந்த அமைப்பு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

The post சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் பயங்கர வெடி விபத்து: அதிகாலை நேரம் என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Rajaram ,Kathanadar Street, Sivakasi, Virudhunagar district ,Naranapuram Pudur ,
× RELATED சிவகாசியில் உள்ள லாரி பார்சல் சர்வீஸ்...