×

சிறுசேரி – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது மாற்றுப்பாதையில் செயல்படுத்த பரிந்துரை: மாதவரம் – எண்ணூர் மெட்ரோ சேவை நீட்டிக்க திட்டம்;மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல்

சென்னை: சிறுசேரி- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டுள்ளதை அடுத்து, இந்த திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாதவரம் முதல் எண்ணூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, 45க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை பணி, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி உட்பட பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் 2028ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித் தடங்களையும் நீட்டிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி வரையிலான 3வது வழித்தடத்தை கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை 26 கி.மீ. நீட்டிக்கவும், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தை பரந்தூர் வரை 43 கி.மீ. நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சிறுசேரி முதல் மாதவரம் பால் பண்ணை வரையிலான மூன்றாவது வழித்தடத்தை கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை 23.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நீட்டிக்க தோராயமாக 12 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் ரூபாய் 5458.6 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்கவும், கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்கவும் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் மூன்றாவது வழித்தடத்தில் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. போதிய பயணியர் இல்லாததால் இந்த விரிவாக்க திட்டம் கைவிடப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அதில் சிறுசேரியிலிருந்து கேளம்பாக்கம் வழியாக திருப்போரூர் வரையும் தேவைப்பட்டால் மகாபலிபுரம் வரையும் நீட்டிப்பு செய்வது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சிறுசேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு திட்டத்தை கைவிட முக்கியக் காரணம், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கு மக்களின் வரவேற்பு மிகக்குறைவாகவே இருக்கும் என சாத்தியக்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஒட்டி போதிய கல்வி நிறுவனங்களோ, அலுவலகங்களோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. நாங்கள் தயாரித்த திட்ட அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளை கணக்கீடு செய்ததில், பீக் ஹவர்களில் ஒரு மணி நேரத்தில் 14,000த்துக்கும் மேல் பயணிகள் பயணிக்க வேண்டும். ஆனால், கிளாம்பாக்கம் – சிறுசேரி திட்டத்தில், பீக் ஹவரில் பயணியர் எண்ணிக்கை 5,000த்தை தாண்டவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால்தான், திட்டம் இப்போதைக்கு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதை மாற்று வழியில் நீட்டிப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும். இதற்கிடையில், கோயம்பேடு – ஆவடி, பூந்தமல்லி – பரந்துார் இடையே, பீக் ஹவர் கணக்கீடு செய்யப்பட்டதில், பயணியர் எண்ணிக்கை 20,000த்தை கடந்தது. மற்ற இரண்டு வழித்தடங்களை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு மாதத்தில் ஆலோசனை நிறுவனங்கள் தேர்வு செய்து, அடுத்த ஆறு மாதத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

* மாதவரம்-விம்கோ நகர்-எண்ணூர் 16 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடம்
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித்தடங்களிலும் புறநகர் பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியிலும் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வடசென்னை மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் அவர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையிலும் மாதவரத்தில் இருந்து விம்கோ நகர் வழியாக எண்ணூர் வரை சுமார் 16.கி.மீ தூரத்திற்கு புதிய வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான டெண்டரை விரைவில் வெளியிட உள்ளது மெட்ரோ நிர்வாகம்.

The post சிறுசேரி – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது மாற்றுப்பாதையில் செயல்படுத்த பரிந்துரை: மாதவரம் – எண்ணூர் மெட்ரோ சேவை நீட்டிக்க திட்டம்;மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Klampakkam ,Tulur ,Chennai ,Suruseri ,Metro ,Monaswaram ,Thuliur ,Madhavaram ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே...