×

ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில் பாஜ நிர்வாகியின் கார் டிரைவருக்கு மீண்டும் சம்மன்: சிபிசிஐடி முடிவு

சென்னை: ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில், பாஜ நிர்வாகியின் கார் ஓட்டுநருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 6ம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆவணங்களைப் பெற்றிருந்த நிலையில், பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பணத்தை கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்ட சதீஷ், நவீன், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரின் உதவியாளர்கள் ஆசைதம்பி, ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாஜ நிர்வாகி கோவர்தன் என்பவர் ஓட்டலில் வைத்து பணம் கைமாற்றப்பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவர்தன் வீடு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது ஓட்டலில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிவில் பணம் கைமாற்றப்படுவதற்கான முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியது. மேலும், விசாரணையில் கோவர்தனுக்கு சொந்தமான ஓட்டலில் பணம் கைமாற்றப்பட்டு, அங்கிருந்து நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஓட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில், இந்த பணத்தை கோவர்தனின் கார் ஓட்டுநர் விக்னேஷ் என்பவர்தான் கொண்டு சென்றதாக தகவல் வெளியான நிலையில், கார் ஓட்டுநர் விக்னேஷுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post ரயிலில் ரூ.4 கோடி கடத்திய வழக்கில் பாஜ நிர்வாகியின் கார் டிரைவருக்கு மீண்டும் சம்மன்: சிபிசிஐடி முடிவு appeared first on Dinakaran.

Tags : Baja ,CBCID ,CHENNAI ,BJP ,Nellai Express ,Tambaram railway station ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் பன்றி மாணவனை கடித்து குதறியது: நெல்லையில் பரபரப்பு