×

சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ


சென்னை: ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, சேப்பாக்கம் அரங்கில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சிஎஸ்கே இதுவரை 12 ஆட்டங்களில் தலா 6 வெற்றி, தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. எனினும், 5 முதல் 8வது இடம் வரை உள்ள அணிகளுக்கும் சம வாய்ப்பு இருப்பதால், எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெறும் முனைப்புடன் சிஎஸ்கே வீரர்கள் உள்ளனர். மதீஷா பதிரணா, மஹீஷ் தீக்‌ஷனா, முஸ்டாபிசுர் ரகுமான் இல்லாதது சிஎஸ்கே பந்துவீச்சை சற்று பலவீனமாக்கி உள்ளது மட்டுமல்ல… நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

அதே சமயம், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 11 போட்டியில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப், கொல்கத்தாபை எதிர்கொள்கிறது. அதில் ஏதாவது ஒரு அணியை வென்றால் கூட போதுமானது என்றாலும், தொடர் வெற்றிகளுக்கு அந்த அணி குறி வைக்கும். மிக எளிதாக வெற்றி பெற வேண்டிய சில போட்டிகளில் அந்த அணி எதிர்பாராத தோல்விகளை சந்தித்துள்ளதால், மிகவும் கவனமாக விளையாடும் என எதிர்பார்க்கலாம். சென்னை வீரர் அஷ்வின் அனுபவமும் ராயல்சுக்கு கை கொடுக்கும்.

லீக் சுற்றின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா சாவா சவாலாகவே இருக்கும். நடப்பு சீசனில் சென்னை அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் ஆட்டம் இது. அதன் பிறகு குவாலிபயர் 2, பைனலுக்காக மட்டுமே மீண்டும் சிதம்பரம் அரங்கில் தலை காட்டலாம்.

* இரு அணிகளும் மோதிய 28 ஆட்டங்களில் சென்னை 15, ராஜஸ்தான் 13ல் வென்றுள்ளன.
* அதிகபட்சமாக சென்னை 246, ராஜஸ்தான் 223 ரன் விளாசி உள்ளன. குறைந்தபட்சமாக ராஜஸ்தான் 126, சென்னை 109 ரன் எடுத்துள்ளன.
* கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 4-1 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* நடப்புத் தொடரில் முதல் முறையாக இந்த அணிகள் மோதுகின்றன.

The post சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் மோதல்: நெருக்கடியில் ருதுராஜ் & கோ appeared first on Dinakaran.

Tags : Super Kings ,Rajasthan ,Ruduraj ,Co. ,Crisis ,Chennai ,IPL ,Chepakkam Arena ,CSK ,Ruduraj & Co. ,Dinakaran ,
× RELATED 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை...