×
Saravana Stores

வாய்ப்பை தக்கவைக்க ஆர்சிபி – டெல்லி பலப்பரீட்சை

பெங்களூர், மே 12: ஐபிஎல் தொடரின் 62வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நடப்புத் தொடரில் இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கின்றன. டு பிளெஸ்ஸி தலைமையிலான பெங்களூரு 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பு வாய்க்கலாம். அந்த முனைப்புடன் கோஹ்லி, தினேஷ், ஜாக்ஸ், பட்டிதார், கிரீன், சிராஜ், கர்ண் ஆகியோரை நம்பி களம் காண்கிறது.

ரிஷப் தலைமையிலான டெல்லி தலா 6 வெற்றி, தோல்வியுடன் 5வது இடத்தில் இருக்கிறது (12 புள்ளி). எஞ்சிய 2 ஆட்டங்களில் பெங்களூரு, லக்னோ அணிகளை வீழ்த்தினால் பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும். இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாத இந்த 2 அணிகளும், வெற்றிக்காக இன்று வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

* இரு அணிகளும் 30 முறை மோதியுள்ளதில் பெங்களூரு 18, டெல்லி 11ல் வென்றுள்ளன.
* அதிகபட்சமாக பெங்களூரு 215, டெல்லி 196 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக பெங்களூரு 137, டெல்லி 95 ரன்னில் சுருண்டுள்ளன.
* கடைசியாக இந்த அணிகள் மோதிய 5 ஆட்டங்களில் பெங்களூரு 4-1 என முன்னிலையில் உள்ளது.

பன்ட் இன்று விளையாடமுடியாது…
ஆர்சிபி அணியுடனான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் இன்று விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மே 7ம் தேதி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், டெல்லி அணி குறிப்பிட்ட நேரத்துக்குள்ளா நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை பூர்த்தி செய்யாமல் தாமதமாகப் பந்துவீசியது. நடப்பு தொடரில் அந்த அணி 3வது முறையாக இந்த தவறை செய்ததை அடுத்து, டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் ஒரு போட்டியில் சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன் அவருக்கு ₹30 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஆர்சிபி அணிக்கு எதிராக பன்ட் களமிறங்க முடியாது என்பதால், அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் அக்சர் படேல் தலைமையில் டெல்லி அணி விளையாட உள்ளது.

The post வாய்ப்பை தக்கவைக்க ஆர்சிபி – டெல்லி பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : RCB ,Delhi ,Bangalore ,IPL ,Royal Challengers ,Delhi Capitals ,Du Plessi ,Bengaluru ,Dinakaran ,
× RELATED பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்து:...