×

டெல்லியில் 77 கிமீ வேகத்தில் புழுதிப்புயல் தாக்கி 3 பேர் பலி: 50 கட்டிடங்கள் இடிந்தன


புதுடெல்லி: டெல்லி, என்சிஆர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு யாரும் எதிர்பாராத வகையில், 50 முதல் 77 கிமீ வேகத்தில் தாக்கிய புழுதிப்புயல் 3 பேரை பலி வாங்கியுள்ளது. 23 பேர் காயமடைந்துள்ளனர். ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்தன. டெல்லி, என்சிஆர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. திடீரென 50 முதல் 77 கிலோமீட்டர் வேகத்தில் புழுதி புயல் தாக்கியது. இதனால், மக்கள் நிலை குலைந்தனர். புழுதியை காற்று வாரி இறைத்தது. பல இடங்களில் சாலைகள், வீடுகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் பழைய வீடுகளும் இடிந்தன. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறை, தீயணைப்பு துறைகளுக்கு தொலைபேசியில் தகவல்கள் கொடுத்து, மீட்பு பணிக்கு உடனடியாக வரும்படி வலியுறுத்தினர். 30 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த புழுதி புயலால் டெல்லி, என்சிஆர் பகுதிகள் சிறிது நேரம் நிலைக்குலைந்து விட்டன. பல பகுதிகளில் முழுவதும் புழுதியாக காணப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேரோடு சாய்ந்த மரங்கள் வாகனங்கள், கார்களின் மீது விழுந்தன.

மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த சம்பவங்கள், வீடுகள் இடிந்தது ஆகியவற்றில் பெண் உள்பட 3 பேர் பலியாகி விட்டனர். 23 பேர் வரை காயமடைந்துள்ளனர். டெல்லியில் வீசிய புழுதிப் புயல் காரணமாக, இந்திரா காந்தி விமான நிலையத்திலும் போக்குவரத்து பாதித்தது. விமானங்கள் தரையிறங்கவோ, கிளம்பவோ முடியாத நிலை உருவானது. வானிலை மிகவும் மோசமாக இருந்ததால் டெல்லிக்கு வந்த 9 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டன.

The post டெல்லியில் 77 கிமீ வேகத்தில் புழுதிப்புயல் தாக்கி 3 பேர் பலி: 50 கட்டிடங்கள் இடிந்தன appeared first on Dinakaran.

Tags : Delhi ,NEW DELHI ,Delhi, NCR ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி