×

ஒரு ஜீவனைவிட மற்றொரு ஜீவன் உயர்ந்தது அல்ல!!

ஸ்ரீ சங்கரர் ஜெயந்தி – 12.5.2024

ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ வந்துதித்தவர் ஆதிசங்கரர். சித்திரைமாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. கி.மு 7ம் நூற்றாண்டில் இன்றைய கேரளாவில் ஆலவாய் என்னும் கிராமத்தில் இருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் காலடி என்கிற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்த வித்யாதி ராஜா என்பவருக்கு, சிவகுரு என்று ஒரு மகன் இருந்தார். அவர் மனைவி ஆர்யாம்பாள். அவர்களுக்கு திருமணம் ஆகியும் வெகு ஆண்டுகளாக குழந்தைப் பேறுஇல்லை என்கிற கவலை. ஆகவே அதற்காக அருகே உள்ள திருச்சூர் வடக்கு நாதர் கோயிலில் 48 நாட்கள் விரதம் இருந்து தினசரி வழிபாடு செய்தனர். சிவன் அருளால் கிபி 788, நந்தன ஆண்டு, வைகாசி மாதம், சுக்கில பட்சம், பஞ்சமி திதி தினத்தன்று திருவாதிரை நட்சத்திரத்தில் ஆர்யாம்பாள் ஒரு ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தாள். ஈசனின் அருளால் பிறந்த குழந்தைக்கு ஈசனின் பெயரான சங்கரன் என்று பெயர் சூட்டினர். சங்கரருக்கு நான்கு வயதான போது சிவகுரு மண்ணுலகை விட்டு நீங்கினார். தாயாரால் வளர்க்கப்பட்ட சங்கரருக்கு, அவருடைய ஏழாம் வயதில் உபநயனம் செய்வித்து அவரை அக்கால வழக்கப்படி குருகுலத்திற்கு அனுப்பி இந்து மதத்தின் புனித நூல்களை பயிலச் செய்தார். சங்கரர் கௌட பாதரின் சீடரான கோவிந்த பகவத் பாதரிடம் வேதம், வேதாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்து ஆதிசங்கர பகவத்பாதர் என்ற பட்டத்தையும் பெற்றார். “காலடி”யில் பிறந்த அவர் ‘‘காலடி” படாத இடம் பாரதத்தில் இல்லை. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் நடந்து நடந்து, அத்வைத சித்தாந்தத்தைப் பரப்பினார்.

உலக உயிர்களின் உன்னதத்தை, அத்வைத தத்துவத்தின் அடிநாதமாக வழங்கியவர். அவருடைய பிரதான நோக்கம்.
1. வேத தர்மத்தைக் காப்பது.
2. மனிதர்கள் ஒவ்வொருவரும் பிரம்மத்தை தங்களுக்குள் உணரச்செய்வது.
ஆதிசங்கரர், இந்து சமயத்தின் மூன்று முக்கிய நூல்களுக்கு (கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்ரம்), தனது தத்துவ விளக்கத்தை அளித்தார். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து நிறைவேற்ற வேண்டிய மகத்தான காரியங்களை வெறும் 32 வயதில் செய்துமுடித்தார். “ஏகம்’’ என்பது பிரம்மம். அந்த பிரம்மத்தை அறியும் ஓர் அடையாளமாகவே ஏக தண்டத்தை ஏந்தி இந்திய சமயமரபின் பெரும் புரட்சிக்கு வித்திட்டார். தனக்குப்பின் அத்வைத தர்மத்தையும், தத்துவத்தையும் அகிலமெல்லாம் பரப்ப சிஷ்யர்களை உருவாக்கினார். ஆங்காங்கே பீடங்களையும் மடங்களையும் உருவாக்கினார். மனிதாபிமானமும், மனித சமத்துவமும் இல்லையேல், ஆன்மிகத்தின் அடித்தளம் அசைந்து விழுந்துவிடும் என்ற உண்மையை உரக்கச் சொன்னவர், ஆதிசங்கர பகவத் பாதர். அத்வைதம் என்பது அகில உலகமும் பரந்துள்ள மகத்தான தத்துவம்.

அதனை வடிவமைத்தவர் அல்ல சங்கரர்; அகில உலகமெல்லாம் கொண்டு சேர்த்த உன்னதப் பணியைச் செய்தவர். “த்வைதம்’’ என்றால் இரண்டு. “அ” என்பது அதை மறுப்பது. அதாவது இரண்டற்றது என்பதே “அத்வைதம்’’. அதை நேரடியாக ஒன்று என்று சொல்லாமல் இரண்டற்றது என்று சொல்வதைப் புரிந்து கொள்வதே அத்வைத சித்தாந்தம். ஒரே சத்தியத்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை என்பது அத்வைதம். ஒருநாள், ஒரு ஏழை பெண்மணியின் வீட்டிற்குச் சென்று பிட்சை கேட்க நேரிட்டது. அன்று துவாதசி. தன்னிடம் ஒன்றும் இல்லாத காரணத்தினால் அந்த எளிய பெண்மணி, தான் உண்ண எடுத்து வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியை மனப்பூர்வமாக சங்கரருக்குக்கொடுத்தார். அப்போது சங்கரர் உள்ளம் குளிர்ந்து செல்வத்தின் கடவுளான ஸ்ரீ லட்சுமி தேவியை வேண்டி, “கனகதாரா ஸ்தோத்திரம்’’ என்கிற ஸ்லோகத்தை பாட, அப்போது ஸ்ரீ லட்சுமி தேவி அருளால் அந்த எளியவளின் கூரை வீட்டின் மீது தங்க நெல்லிக்கனிகள் மழையாக பொழிந்தது.

ஆதிசங்கரரின் காலத்தில், தீண்டாமை எனும் கொடுமை இருந்தது. இதில் சற்றும் விருப்பமில்லாத சங்கரர், வாழ்வில் ஒரு அற்புதம் நடத்த திட்டமிட்டான் இறைவன். இப்படிப்பட்ட நாடகங்கள் எல்லா மகான்களின் வாழ்விலும் நடந்திருக்கிறது. இதை வைத்து, “இதுகூட ஞானிகளுக்குத் தெரிவதில்லை” என்று, நமது குறை அறிவால் ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. காசியிலே அவர் தனது அத்வைத கொள்கைளை மற்றவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்த காலம் அது. அவர் மனதிலே தீண்டாமை இல்லை. அவரைச் சுற்றி இருந்தவர்கள் மனதில் இருக்கவே செய்தது. ஒருநாள் தன் சீடர்கள் புடைசூழ, கங்கையில் நீராடச் சென்று கொண்டிருந்தார். வீதிகள் விரிவாக இருக்காது காசியில். குறுகிய ஒரு வீதியின் வழியே சென்று கொண்டிருந்தபொழுது, எதிரே ஒருவன் தன் மனைவியுடன், நான்கு நாய்களை இழுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மனைவியின் கையிலோ மதுக்குடம். சங்கரர் அவனைப் பார்த்து, “சற்று விலகி நில்’’ என்று கூறுகிறார். வந்தவன் முகத்தில் புன்னகை. “யாரை விலகச் சொல்கிறாய்? இந்த உடலையா? இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா? எதை விலகச் சொல்கிறாய்?’’

என்று பொருள்படும் வகையில் கேள்வி கேட்கிறான். இதைக் கேட்டவுடன், சங்கரர் சற்று திகைத்தார். வந்தவன் பார்வதி பரமேஸ்வரன் என்று சங்கரருக்கு உள் ஞானம் உணர்த்தியது. நமஸ்காரம் செய்து நிமிர்ந்த போது, சிவபெருமான் பார்வதியுடன் அவருக்குக் காட்சி அளிக்கிறார். அவருடன் வந்த நாய்கள் நான்கு வேதங்கள். பார்வதி வைத்திருந்தது அமிர்தக்குடம். ஒரு குரு, எந்த வடிவிலும் வந்து உண்மையை உணர்த்துவார். உருவத்தை எடை போட்டு, ஞானத்தை அளக்காதே என்பதை நமக்கு எடுத்துக் காட்டவே இந்த நிகழ்வு. அப்போது சங்கரர் பாடிய ஐந்து ஸ்லோகங்கள்தான் “மனிஷா பஞ்சகம்’’. இதன் பின்னணியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்.

1. அழிந்து விடக்கூடிய உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாகுபாடு பார்ப்பது தவறு. ஒரு ஜீவனைவிட மற்றொரு ஜீவன் உயர்ந்தது அல்ல.
2. எல்லா உயிர் இனங்களிலும் ஒரே ஆன்மாதான் (பரமாத்மா) வீற்றுள்ளது.
3. நீர்நிலையில் பிரதிபலிக்கும் சூரியன் பிம்பம்போல், எல்லா படைப்பிலும் ஆண்டவன் வீற்றுள்ளான். கலங்காத நீரில் தெரியும் பிம்பம் போல், அத்வைதி எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான்.
4. கங்கையின் நீரிலும் குட்டையின் நீரினிலும் காண்கின்ற சூரியனில் வேற்றுமை உண்டோ?
5. தண்ணீரைத் தாங்கி நிற்பது மண் குடமோ, பொற்குடமோ அதில் தெரியும் சூரியனின் பிம்பத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அதுபோல் அனைவரிலும் அனைத்திலும் உறைவது அந்த பரமாத்மனே.

வெளிப்பார்வைக்கு நல்லது, கெட்டது போல் தெரியும். கெட்டது, நல்லது போல் தெரியும். இந்தக் காட்சி மாறுபாட்டின் காரணம் மாயை. அந்த மாயையை உரித்து காட்டவே இந்த நிகழ்வு. இதை விளக்குவது மனிஷா பஞ்சகம். உண்மையில் அத்வைத தத்துவத்தின் சுடர் விளக்கு மனிஷா பஞ்சகம். இந்த ஐந்து ஸ்லோக வெளிச்சத்தில் அத்வைத தரிசனத்தை நம்மால் முழுமையாக தரிசிக்க முடியும். சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு அனைத்து சங்கர மடங்களிலும் சிறப்புப்பூஜைகள், வேத பாராயணம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். சங்கர ஜெயந்தியன்று ஒவ்வொருவரும் அவருடைய குரு புகழ் பாடுவதோடுகூட, அவர் செய்த நூல்களைப் படிப்பதோடுகூட அதன்பிரகாரம் வாழ்க்கையிலே நாம் கடைப்பிடிப்பதற்கும் சிறிதளவாவது முயற்சி செய்தால், அதுதான் ஆதிசங்கரர் பெருமானுக்கு நாம் செய்யும் பெரும் தொண்டாகும்.
– கோகுலாச்சாரி

The post ஒரு ஜீவனைவிட மற்றொரு ஜீவன் உயர்ந்தது அல்ல!! appeared first on Dinakaran.

Tags : Sri Shankar Jayanti ,Adi Shankar ,Valarpirai Panchami ,Moon ,Sankar ,Alavai ,Kerala ,
× RELATED சங்கரர் போற்றும் (கஜ) சம்ஹார தாண்டவம்