×

தெலுங்கு தேசம் கட்சி தலைவருக்கு 7 முறை தொடர்ந்து வெற்றி வழங்கியது குப்பம் தொகுதியில் 8வது முறையாக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற சந்திரபாபு வியூகம்

*தொகுதியை கைப்பற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரசும் தீவிரம்

திருமலை : ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி மாநில எல்லை பகுதியாகும். 1955-ம் ஆண்டு குப்பம் தொகுதி ஏற்பாடானது. அந்தத் தேர்தலில் டி.ராமபிரகாம் வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1962ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வஜ்ரவேலு செட்டியும், 1967 மற்றும் 1972ல் சுயேச்சை வேட்பாளர் டி.வெங்கடேஷமும் இரண்டு முறை வெற்றி பெற்றனர். 1978ல் காங்கிரஸில் இருந்து துரைசாமி நாயுடு வெற்றி பெற்றார். 1983ல் என்.டி. ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.

அதன் பிறகு குப்பம் அக்கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. ரங்கசாமி நாயுடு 1983 மற்றும் 1985ல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்றார். 1989 முதல், நாரா சந்திரபாபு நாயுடு இங்கு தொடர்ந்து வெற்றியை தக்க வைத்து வருகிறார். சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊர் சந்திரகிரி. 1978-ம் ஆண்டு சந்திரகிரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 1983 ஆண்டு தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் சந்திரபாபு மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால் அங்கு அவர் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அதே சமயம், தெலுங்கு தேசம் கட்சிக்கு தொடர் வெற்றிகள் பெற்று வந்த குப்பம் தொகுதிக்கு செல்ல சந்திரபாபு திட்டமிட்டார். அதன்படி 1989 தேர்தலில் குப்பம் சென்றார் அதன் பிறகு அங்கிருந்து அவர் தொகுதி மாறும் நிலை ஏற்படவில்லை. 1989 முதல் 2019 வரை சந்திரபாபு நாயுடு குப்பத்தில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றார். மூன்று தசாப்தங்களாக அவருக்கு அப்பகுதி மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இன்னும் கடுமையாக முயன்றால் சந்திரபாபுவை தோற்கடிப்பது ஒன்றும் கடினமல்ல என்று அக்கட்சி தலைவர்கள் கருதத் தொடங்கினர். சந்திரபாபுவே இலக்காக கொண்டு ‘ஆபரேஷன் குப்பம்’ என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையில் செயல்பட்டது. 2024 தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ஆபரேஷன் குப்பத்தை தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக குப்பம் தொகுதி பொறுப்புகளை அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டியிடம் வழங்கினார். முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் உத்தரவின் பேரில் குப்பம் தொகுதியில் பணியாற்றி வரும் அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திர, எம்.பி.ரெட்டப்பா, பொறுப்பாளர் பரத் ஆகியோர் தொகுதியில் வலுவாக கால் பதிக்க வைத்தனர்.

இதனால் உள்ளாட்சித் தேர்தலில் குப்பம் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எதிர்பாராத முடிவுகளுடன் வெற்றி பெற்றது. இத்தொகுதியில் கிட்டத்தட்ட 80 சதவீத இடங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. ஆரம்பம் முதலே தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டையாக இருந்த குப்பம் நகராட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கொடி பறந்தது. அதன் பிறகு பரத் எம்எல்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு சித்தூர் மாவட்ட கட்சியின் தலைவராக பரத் தேர்வு செய்யப்பட்டார்.

அமைச்சர் பெத்திரெட்டியின் ஆதரவுடன் பரதத்துக்கு அடுத்தடுத்து பதவிகள் கிடைத்தன. முதல்வர் ஜெகன் மோகனுன் மாநிலம் தழுவிய தொகுதி வாரியான விமர்சனங்களும் குப்பத்தில் இருந்து தொடங்கினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின், குப்பத்தில் நிலைமை சற்று மாறியது. தெலுங்கு தேசம் கட்சியின் கோட்டை போன்ற கிராமங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அடியெடுத்து வைத்துள்ளது. சந்திரபாபு 30 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர்.

மேலும், சந்திரபாபு கள்ள வாக்குகள் மூலம் வெற்றி பெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குப்பம் மக்கள் வேலை வாய்ப்புக்காக பெங்களூருவுக்கு குடிபெயர்ந்தாலும் சந்திரபாபு நாஅவர்களுக்காக என்ன செய்தார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்ய தொடங்கினர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தொடர் தாக்குதலை கவனித்த சந்திரபாபு நேரடியாகவே களத்தில் இறங்கினார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குப்பத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை சரி செய்ய குப்பத்தில் சொந்த வீடு கட்ட அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி உள்ளார். சந்திரபாபுவே இறங்கி பல இடங்களில் சமீப காலமாக குப்பம் வருவதால் அப்பகுதி மக்கள் சற்று ஆச்சரியத்தில் உள்ளனர். கடந்த 6 மாதங்களாக சந்திரபாபு குப்பம் வரும்போதெல்லாம் சண்டை சச்சரவுகள் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மூலம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் குப்பம் நகரின் மையப்பகுதியில் சந்திரபாபு சுற்றுப்பயணத்தின் போது போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. சந்திரபாபு- அமைச்சர் பெத்திரெட்டி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் குப்பம் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், குப்பத்தில் நடைபெறும் சம்பவங்கள் மக்களிடையே சந்திரபாபு நாயுடு மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. இந்த வயதிலும் முதியவரை அழ வைக்கிறார்களே என்று அப்பகுதி மக்கள் கவலை அடைய வைத்துள்ளது. குப்பம் சம்பவம் மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுசேர்க்கும் விதமாக மாறியது. இப்போது குப்பத்தில் மூன்றாம் கட்சியினருக்கு இடமில்லை. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் டாக்டர் சுரேஷும், ஜனசேனா கட்சி சார்பில் வெங்கடரமணா என்ற இளம் மருத்துவரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் 4000 வாக்குகளும், ஜனசேனா வேட்பாளர் 2000 வாக்குகளும் பெற்றனர்.

ஜன சேனா வேட்பாளர் வெங்கடரமணா சமீபத்தில் அக்கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டு திருப்பதியில் மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக அத்தொகுதியில் கூறப்படுகிறது. இடதுசாரிக் கட்சிகள் இங்கு அதிகம் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு சந்திரபாபு தனது நிலைப்பாட்டை மாற்றினார்.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் குப்பம் சுற்றுப்பயணம் செய்ததன் மூலம் கட்சியினர் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. பல ஆய்வுக் கூட்டங்களால் கட்சி நிர்வாகிகளும் நெருங்கி வருகின்றனர். தற்போது மேலும் குப்பத்தில் புதிய அணியை உருவாக்கி, குப்பம் தொகுதிக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைத்து எம்எல்சி கஞ்சர்லா ஸ்ரீகாந்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ்.முனிரத்னம் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக இருப்பதால் சந்திரபாபுவை இந்த தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் குப்பத்தில் இருந்து யுவகலம் பாதயாத்திரையை தொடங்கினார். லோகேஷ் மற்றும் சந்திரபாபு மனைவி புவனேஸ்வரி தொடர் சுற்றுப்பயணங்கள் காரணமாக ஒரு லட்சம் பெரும்பான்மை இலக்காக கொண்டுள்ளனர். சமீபகாலமாக ஹந்ரி- நீவா திட்டத்தில் தண்ணீர் கொண்டு வரும் விவகாரம் இரண்டு கட்சிகளுக்கும் அரசியல் ஆயுதமாக மாறி உள்ளது. குப்பத்திற்கு ஹந்ரி- நீவா திட்டத்தில் தண்ணீர் கொடுத்த பெருமை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேரும் என கூறி வருகின்றனர். ஆனால் அதற்கு பதிலடியாக சந்திரபாபு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஹந்ரி- நீவா திட்ட கால்வாயில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

ஹந்திரி- நீவா திட்டத்தில் தண்ணீரை குப்பத்திற்கு திறந்துவிட்ட முதல்வர் ஜெகன் மோகன் குப்பத்திற்கு முதலில் தண்ணிர் கொடுத்த பெருமை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சாரும் என்றார். 35 ஆண்டுகள் சந்திரபாபுவை வெற்றி பெற செய்தாலும் இந்த தொகுதிக்கு குறைந்த பட்சம் தண்ணீர் கொடுக்கவில்லை, வளர்ச்சியும் பூஜ்யம் என்று ஜெகன் மோகன் கூறினார். இந்த முறை குப்பத்தில் பரத்தை வெற்றி பெற செய்தால் அமைச்சராக உங்கள் தொகுதிக்கு அனுப்புகிறேன் என்றார்.

குப்பத்துக்கு தண்ணீர் கொண்டு வந்தது தேர்தலுக்கு முன் சந்திரபாபுவுக்கு தோல்வியை கொண்டு வரவழைக்கும் உத்தி என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். இந்த முறை குப்பம் தொகுதியில் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 1999 தேர்தலுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவின் பெரும்பான்மை படிப்படியாக குறைந்து வருவது உண்மைதான். ஆனால் ஒரு லட்சம் இலக்குடன் தெலுங்கு தேசம் கட்சி டிடிபி சொல்கிறது. சந்திரபாபுவை தோற்கடிக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் இலக்கு வைத்துள்ளது.

மக்களுடன் நேரடி தொடர்பு

ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின் தங்கியிருந்த குப்பம் இப்போது நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது. குப்பம் தொகுதியின் வளர்ச்சியின் ஒவ்வொரு பணியிலும் சந்திரபாபுவின் முத்திரை தெரியும். சந்திரபாபு இதுவரை ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே குப்பம் செல்வார். தொகுதிக்கு வரவில்லை என்றாலும் அங்கு அவரது ஆதராவாளர்களுடன் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். சந்திரபாபு ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குப்பத்தின் வளர்ச்சி நின்றபாடில்லை. குப்பம் கிராம அளவிலான தலைவர்களுடன் சந்திரபாபுவுக்கு நேரடி தொடர்பு உள்ளது. பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்கள் நெருக்கம் கொண்டுள்ளார். குப்பம் மக்களும் சந்திரபாபுவை தங்களுடையவராகவே கருதுகின்றனர்.

சந்திரபாபு பிரசாரத்துக்கு செல்லாவிட்டாலும் அங்குள்ள மக்கள் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வருகின்றனர். சித்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற இந்த தொகுதி வாக்கு சதவீதமும் முக்கிய காரணமாக அமைந்த சம்பவங்களும் உண்டு. கடந்த 30 ஆண்டுகளில் குப்பத்தில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் சந்திரபாபுவின் செயல் என்றும் உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.

The post தெலுங்கு தேசம் கட்சி தலைவருக்கு 7 முறை தொடர்ந்து வெற்றி வழங்கியது குப்பம் தொகுதியில் 8வது முறையாக 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற சந்திரபாபு வியூகம் appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Kuppam ,Telugu Desam party ,YSR Congress ,Tirumala ,Chittoor District Kuppam Constituency ,Andhra State ,D. Ramapragam ,Kuppam constituency ,Dinakaran ,
× RELATED 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று...