×

டேன்டீ தேயிலைத் தோட்ட பரப்புகளை வனத்துறைக்கு வழங்கியதால் தொழிலாளர்கள் பாதிப்பு

பந்தலூர் : நீலகிரி மாவட்டம்,பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலைத்தோட்டம் சரகம் 4 பகுதியில் வசித்து வரும் திமுக மாவட்ட பிரதிநிதி கணபதி நீலகிரி கலெக்டர் மற்றும் அரசு தேயிலை தோட்ட கழக நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட கழக கோட்ட மேலாளராக சிவகுமார் என்பவர் இருந்து வருகிறார். இவர் பொறுப்பேற்றபின் கோட்டத்தின் பல ஹெக்டேர் தேயிலை தோட்ட பகுதிகளை தொழிலாளர்கள் எதிர்ப்புகளுக்கிடையே வனத்துறையிடம் ஒப்படைத்தார்.அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையிடம் ஒப்படைத்தால் வருங்காலத்தில் தேயிலை உற்பத்தி பாதிக்கும். அதனால் நிர்வாகம் இழப்புகளை சந்திக்கும் என்று வலியுறுத்திய போதிலும், இதனை கண்டுக் கொள்ளவில்லை.

தற்போது கோட்ட மேலாளர் சேரம்பாடி கோட்டத்தில் தேயிலை உற்பத்தி குறைவாக உள்ளது. இதற்கு காரணம் தேயிலை பரப்புகளை வனத்துறையிடம் ஒப்படைத்தது தான் காரணம் என்பதனை ஏற்றுக் கொள்ளாமல், கடுமையான வெயில் சுட்டெரிக்கின்ற தற்போது பெண் தொழிலாளர்களை வேண்டும் என்றே காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வெயிலில் நிற்க வைத்து பழி வாங்கி வருகிறார்.

மேலும் 8 மணி நேரம் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பள குறைப்பு செய்கிறார். தேயிலை செடிகளில் இலையே இல்லை என்று தெரிந்ததும், 35 கிலோ இலை பறிக்கவில்லை என்று கூறி நடவடிக்கை எடுக்க போவதாக தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். 15 நாட்கள் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை எடுக்க வேண்டிய பசுந்தேயிலை தற்போது போதுமான அளவு தேயிலை பரப்புகள் இல்லாத காரணத்தால், 5 நாட்கள் அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கவேண்டிய நிலை உள்ளது.

பெண் தொழிலாளர்களை வேண்டும் என்றே பழிவாங்கி வரும் கோட்ட மேலாளர் மீது நேர்மையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாதந் தோறும் 7ம் தேதி வழங்க வேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.அதுமட்டுமல்ல தற்போது உள்ள இழப்பிற்கு கோட்ட மேலாளரின் தவறான செயல்பாடுகள் தான் காரணம். எனவே இழப்பை சரிசெய்யும் பொருட்டு அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்யவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

The post டேன்டீ தேயிலைத் தோட்ட பரப்புகளை வனத்துறைக்கு வழங்கியதால் தொழிலாளர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Dandee ,Bandalur ,DMK ,Ganapati Nilgiris Collector ,Government Tea Estate Corporation ,Charakam 4 ,Serambadi ,Government Tea Estate ,Bandalur, Nilgiri District ,
× RELATED மரம் தலையில் விழுந்ததில் மூதாட்டி பலி