×

ஆலங்குளம் அருகே கோயில் கொடை விழா கூட்டத்தை பயன்படுத்தி கடைகளில் நூதன மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது

*போலீசார் அதிரடி நடவடிக்கை

ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி கோயில் கொடை விழாவில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் அருகே ஆலடிப்பட்டி சுடலை மாடன் சுவாமி கோயில் கொடை விழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. விழாவில் சுரண்டை அருகேயுள்ள ஆலடிப்பட்டி, அருணாசலபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ெபாதுமக்கள் பல்வேறு வாகனங்களில் வந்து தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோயில் கொடை விழாவில் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம கும்பல் நூதன மோசடியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் கோயிலை சுற்றி நோட்டமிட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள அய்யங்கோவில்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த நல்லு மகன் பிச்சை (59) அவரது மனைவி மொக்கத்தாய் (55) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த காந்தி மகன் நல்ல குரும்பன் (60) அவரது மனைவி முனியம்மாள் (50) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகளில் நுழைந்து நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, அங்குள்ள கூட்டம் அதிகமாக இருந்த ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு ஒருவர் பணம் கொடுப்பார்.

ஆனால் மற்றவர்கள் அதற்கான மீதி பணத்தை ஒருவர் மாறி ஒருவர் கேட்டு வரிசையாக பெற்று கொள்கின்றனர். இதே போன்று கோயிலில் முடிகாணிக்கை செலுத்தும் இடத்தில் முடிதிருத்தும் தொழிலாளியிடம் ஒருவர் பணம் கொடுத்து மீதி சில்லறையை கேட்டு வாங்கியுள்ளனர். அதே போன்று மற்ற நபர்களும் அனைவரும் பணம் வாங்கியுள்ளனர். இதே போன்று பல்வேறு கடைகளில் நூதன முறையில் பணம் பறித்ததாக ெதரிகிறது. இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

குறிப்பாக, கடந்த 2016ல் ஒட்டன்சத்திரம் ஓட்டலில் பணம் பறித்த வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் பயன்படுத்தி வரும் காரும் திருடப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆலங்குளம் அருகே கோயில் கொடை விழா கூட்டத்தை பயன்படுத்தி கடைகளில் நூதன மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Alankulam ,Aladipatti temple donation ,Aladipatti Sudalai Madan ,Swami ,temple donation ceremony ,donation ,
× RELATED ஆலங்குளத்தில் போலீசுக்கு அரிவாள் வெட்டு