×

டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க ஊருக்குள் வந்த வாகனங்கள்: சாலையை அடைத்த கிராம மக்கள்

திருமயம், மே 11: திருமயம் அருகே டோல்கேட்டில் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக வாகன ஓட்டிகள் கிராம சாலையை பயன்படுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையை கற்கள் கொண்டு அடைத்தனர். திருச்சியில் இருந்து திருமயம் வழியாக காரைக்குடி பைபாஸ் சாலையில் செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக லெம்பலக்குடியில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு திருச்சி, தஞ்சை, சிவகங்கை, காரைக்குடி, ராமேஸ்வரம், மதுரை, புதுக்கோட்டை மார்க்கமாக இருந்து வரும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அவ்வாறு டோல்கேட்டை வாகனங்கள் கடக்கும் போது வழக்கம் போல் சுங்க கட்டணம் செலுத்தி செல்கின்றன. இதனிடையே டோல்கேட்டிற்கு முன்னதாக பைபாஸ் சாலையில் இருந்து பிரிந்து பிள்ளைபட்டி வழியாக செல்லும் கிராம சாலை ஒன்று உள்ளது. பெரும்பாலான வாகனங்கள் டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக பிள்ளைபட்டி கிராம சாலையை பயன்படுத்துவதாக புகார் எழுந்து வந்தது.

இதனால் கிராம சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் சாலை சேதமடைவதோடு அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கிராம சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் கனரக வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது சிக்கிக்கொண்டு ஹாரன் எழுப்புவது அப்பகுதி மக்களை எரிச்சலடைய செய்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் பிள்ளைபட்டி சாலை வழியாக வரும் வாகனங்களை பலமுறை எச்சரித்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிள்ளைபட்டி கிராம மக்கள் பைபாஸ் சாலையிலிருந்து வாகனங்கள் வரும் கிராம சாலையில் நேற்று குத்து கற்கள் மற்றும் மண்கை கொட்டி தடுப்பு அமைத்துள்ளனர். இன்றும் அந்த தடுப்பு நீடிக்கிறது. இதன் மூலம் வாகனங்கள் அந்த வழியாக செல்லவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க ஊருக்குள் வந்த வாகனங்கள்: சாலையை அடைத்த கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,Karaikudi ,Trichy ,Tirumayam ,Dinakaran ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...