×

கல்லூரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில கல்லூரிகளில் வைக்கப்பட்டு உள்ளன. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் அந்த கல்லூரிகளுக்கு மாணவர்கள் தேர்வுக்காக வந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு செமஸ்டர் தேர்வை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல், அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில கல்லூரிகளில் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களாக செயல்பட்டு வருகின்றன.

பாதுகாப்புக்காக இந்த கல்லூரிகளுக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் வந்து செல்வதற்கு மிகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பதோடு, சில இடங்களில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இறுதி செமஸ்டர் தேர்வை நடத்துவது மாணவர்களுக்கு சரியாக இருக்காது. எனவே வருகிற 15ம் தேதி முதல் தொடங்க இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற தன்னாட்சி அதிகாரம் பெறாத இன்ஜினியரிங் கல்லூரிகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுகின்றன. இந்த தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனை மாணவர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

The post கல்லூரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Tamil Nadu ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED பொறியியல் படிப்புக்கு 1.73 லட்சம்...