×

சென்னை புறநகர் பெட்டிக் கடைகளில் 13 கிலோ குட்கா பறிமுதல்: துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை

திருவொற்றியூர்: சென்னை புறநகரில் மணலி உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ குட்கா போதைபொருள் பாக்கெட்டுகளை நேற்று மாலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக துணை ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றான மணலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக நேற்று செங்குன்றம் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று மாலை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார், மணலி காவல்நிலைய எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து சாலையோர பெட்டிக் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 13 கிலோ குட்கா போதைபொருள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி துணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், செங்குன்றம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு காவல்நிலையப் பகுதிகளில் பான்மசாலா மற்றும் குட்கா போதைபொருள் விற்பனையைத் தடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி செங்குன்றம், சோழவரம், மாதவரம் பால்பண்ணை, மணலி உள்பட பல்வேறு காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து 13 கிலோ எடையிலான குட்கா போதைபொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. செங்குன்றம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதைபொருள் விற்பனையை முழுவதுமாக தடுக்கும் வகையில் 18 சிறப்பு காவலர் குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

The post சென்னை புறநகர் பெட்டிக் கடைகளில் 13 கிலோ குட்கா பறிமுதல்: துணை ஆணையர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Gudka ,Manali ,Balakrishnan ,Dinakaran ,
× RELATED கோட்டும் ஒயிட்டு; நோட்டும் ஒயிட்டு...