×

பாஜக வெற்றி பெற்றால் ஒடிசாவை நம்பர் ஒன் மாநிலமாக்குவோம் என பிரதமர் மோடி பேச்சு : பாஜக ஆளும் மாநிலங்கள் நம்பர் ஒன் ஆகாதது ஏன் என விமர்சனம்

டெல்லி : பாஜகவிற்கு வாக்களித்தால் ஒடிசாவை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில், இதே முழக்கத்தை முன்வைத்து கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் பாஜக தோல்வி அடைந்து இருப்பதை சுட்டிக் காட்டி விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு செல்லும் போது, பாஜகவிற்கு வாக்களித்தால் அம்மாநிலத்தை இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன் என்று பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக மாற்றுவோம் என்று மோடி பேசி இருந்தார்.

கர்நாடகாவில் மோடியின் நம்பர் 1 முழக்கத்தை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஒடிசாவிலும் பாஜகவிற்கு வாக்களித்தால் நம்பர் 1 மாநிலம் ஆக்குவோம் என்ற முழக்கத்தை மீண்டும் மோடி எழுப்பியுள்ளார். இதே போல தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலின் போது, பரப்புரை கூட்டங்களில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பாஜகவுக்கு வாக்களித்தால் தெலங்கானவை நம்பர் 1 மாநிலம் ஆக்குவோம் என்று பேசினார். இந்த நிலையில் கர்நாடகா மற்றும் ஒடிசாவில் மோடி பேசிய வீடியோக்களை இணைத்து சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை நம்பர் 1 ஆக்குவோம் என்று கூறும் மோடியும் அமித்ஷாவும் பாஜக ஆளும் மாநிலங்களை நம்பர் 1 மாநிலங்களாக மாற்றாதது ஏன் என்றும் இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post பாஜக வெற்றி பெற்றால் ஒடிசாவை நம்பர் ஒன் மாநிலமாக்குவோம் என பிரதமர் மோடி பேச்சு : பாஜக ஆளும் மாநிலங்கள் நம்பர் ஒன் ஆகாதது ஏன் என விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Odisha ,BJP ,Delhi ,Karnataka ,Telangana ,
× RELATED ஒடிசாவில் பாஜ அமைச்சரவை 12ம் தேதி பதவியேற்பு