*சர்வீஸ் சாலை அமைக்க கோரிக்கை
விருதுநகர் : விருதுநகர் வடமலைகுறிச்சி ரோடு சந்திப்பில் நடக்கும் தொடர் விபத்துக்களை தவிர்க்க அப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் கலைஞர் நகர், வடமலைக்குறிச்சி மற்றும் பாவாலி கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நூற்றுக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் ஊரின் கிழக்குப்பகுதியில் இருந்து மேற்கு பகுதிக்கு கடந்த செல்ல உரிய சாலை வசதிகள் இல்லை. இதனால் பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள மேடு பள்ளமான மண் சாலை வழியாக சென்று வருகின்றனர். தாழ்வான பகுதி என்பதால் அங்கு மழை காலங்களில் பல நாட்கள் தண்ணீர் தேங்குகிறது.
இதனால் அந்நேரங்களில் அவ்வழியே செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், விருதுநகர் வடமலைகுறிச்சி ரோடு சந்திப்பில் நான்கு வழி சாலையில் சர்வீஸ் ரோடு இல்லாததால் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையில் எதிர்திசையில் செல்கின்றனர். இதனால் விபத்துகள் நடக்கின்றன. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதனால் சர்வீஸ் சாலை வசதிகள் கோரி கலைஞர் நகர், வடமலைகுறிச்சி, பாவாலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் ரூ.17 கோடி செலவில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் பொது மக்கள் சென்று வர ஏதுவாக தற்காலிக சாலை அமைக்கப்படும் என்றும் மின் விளக்குகள் அமைத்து தரப்படும் எனவும் உறுதி அளித்தனர். ஆனால் தற்போது வரை தற்காலிக சாலைபோடப்படவில்லை. சர்வீஸ் சாலை அமைக்கப்படும் பணியும் தற்போது வரை தொடங்கப்படவில்லை.
ஏற்கனவே அப்பகுதியில் பாலத்தை ஒட்டியுள்ள மேடு பள்ளமான மண் சாலையில் மழை காலங்களில் கழிவு நீர் தேங்கி மக்கள் பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள அப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் விபத்து மற்றும் விபத்துக்களால் ஏற்படும் தொடர் உயிரிழப்புகளை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் எதிர்திசையில் செல்லும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.